காஷ்மீரில் முதலீடு செய்ய வாருங்கள் அமீரக தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அபுதாபி: காஷ்மீரில் உகந்த சூழ்நிலை இருப்பதால் அங்கு முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்திய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருவது இது 3வது முறையாகும். அபுதாபியில் நேற்று பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தனது இரண்டாவது வீட்டுக்கு வந்துள்ள சகோதரர் மோடியை வரவேற்கிறேன் என இளவரசர் தெரிவித்தார். தொடர்ந்து இரு நாடுகள் உறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூபே கார்டை அறிமுகம் செய்தார். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக்கத்துக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார்டு ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் பூடானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ரூபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும். இங்குள்ள பல வர்த்தக குழுக்கள் இந்த கார்டை தங்கள் வர்த்தக பரிமாற்றத்துக்கு ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு அமீரகத்தின் மிக உயரிய விருதான ``ஆர்டர் ஆப் சயீத்’’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த உதவியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோர் பெற்றுள்ளனர்.இந்நிலையில் நேற்று தலைநகர் அபுதாபியில் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்திய பொருளாதார வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை இந்தியாவை சிறந்த முதலீட்டு மையமாக மாற்றியுள்ளது. எனவே நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும். இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் இரட்டிப்பு வருமானத்தை பெற முடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன். குறிப்பாக நீங்கள் காஷ்மீரில் முதலீடு செய்ய வேண்டும். அங்கு முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது’’ என்றார்.

 பின்னர் ஐக்கிய அமீரகத்தில் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாமுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, ‘‘ஐக்கிய அரபு அமீரகம் எங்களது மதிப்புமிக்க கூட்டாளியாக விளங்குகிறது. இந்தியாவின் மூன்றாவது ெபரிய வர்த்தக கூட்டாளியான அரபுநாட்டில் கடந்த 2018-19ல் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதியை மேம்படுத்த நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து மோடி தனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பஹ்ரைன் புறப்பட்டுச் சென்றார்.

Tags : PM Modi,calls, US businessmen,invest, Kashmir
× RELATED தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123...