நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர் வேலை ஆசை காட்டி நிர்வாண புகைப்படம் பெற்று 600 பெண்களிடம் பணம் பறிப்பு: சென்னை சாப்ட்வேர் ஊழியர் கைது

திருமலை: நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர் பணி ஆசை காட்டி நிர்வாண புகைப்படம் பெற்று இளம்பெண்களிடம் பணம் பறித்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்செழியன் என்கிற பிரதீப்(33), தனியார் சாப்ட்வேர் கம்பெனி ஊழியர். இவர், ‘பிரதீப் க்யூக்கர்.காம்’ என்ற வெப்சைட் மூலமாக பெண்களின் செல்போன் எண்களை பெற்றார். அந்த எண்களில், பிரபல நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளர்களுக்கான வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி வாட்ஸ்ஆப் மூலம் பதிவிட்டு அந்த பெண்களுக்கு அனுப்பினாராம். இதனைக்கண்டு நாடு முழுவதும் 16 மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பெண்கள், பிரதீப்பை தொடர்புக்கொண்டு விவரம் கேட்டுள்ளனர். அப்போது, தன்னை அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெயரில் மனித வள மேலாளராக  அறிமுகப்படுத்தி ‘சாட்’ செய்ய தொடங்கிய பிரதீப், வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பில் வரும் பெண்களிடம் பயோடேட்டா மற்றும் புகைப்படங்களை கேட்டுவந்தார். அதன்பேரில் ஏராளமான பெண்கள் பயோடேட்டா அனுப்பி வந்துள்ளனர். அடுத்த சில நாட்களில், அந்த எண்ணிற்கு சாட் செய்யும் பிரதீப், ‘ஓட்டலில் வரவேற்பாளர் பணி என்பதால் உடல் கட்டமைப்பு முக்கியம். எனவே முன்னழகு, பின்னழகு புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் தானே கேட்கிறார் என நம்பி, ஏராளமான பெண்கள் தங்களது அந்தரங்க நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அந்த புகைப்படங்கள் வந்தவுடன் உடனடியாக அவர்களை, ‘வீடியோ கால்’ மூலம் தொடர்புக் கொள்ளும் பிரதீப், ‘உடனே எனக்கு பணம் அனுப்பி வை அல்லது எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் உனது நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இத்தனை நாளும் தாங்கள் சாட்டிங் செய்தது பெண் அல்ல, ஒரு ஆண் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் வேறு வழியின்றி பணம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் சில பெண்கள் வேறுவழியின்றி அவர் கூறிய இடத்திற்கு வந்து தனிமையில் இருந்துள்ளனர். இதேபோல் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம் உட்பட 16 மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

பல பெண்களை அவர் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது. அந்த வகையில் பெண்களிடமிருந்து பல கோடி வரை பணம் பறித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெலங்கானாவின் மியாப்பூர் போலீசில் சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னையில் பதுங்கியிருந்த பிரதீப்பை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், பிரதீப்பிடம் இருந்து பெண்களின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்களை பறிமுதல் செய்தனர்.  கைதான பிரதீப்புக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

Related Stories: