முட்டுக்காடு உப்பங்களி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு அடுத்த கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 50 அடி தூரத்தில் உப்பங்களி ஆறு உள்ளது. ஆண்டுதோறும் கடலில் மீன்பிடி தடைக்காலம் வரும்போது இப்பகுதி மீனவர்கள் 3 மாதங்களுக்கு இந்த ஆற்றில் மீன்களை பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை பல வருடங்களாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கம்பெனிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் விடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் உப்பங்களி ஆற்றில் தற்போது டன் கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இது, சமீபகாலமாக அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதோடு மீனவர்களின் வாழ்வாதாரம்  பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, உப்பங்களி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை உடனுக்குடன் அகற்றவும், சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவாதவாறு தடுக்கவும் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் ஆறு மாசடைந்து காணப்படுகிறது. ஆற்றுக்கும், கடலுக்கும் சுமார் 50 அடி தூரம் மட்டுமே இருப்பதால் அரசு இங்கு முகத்துவாரம் அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். முகத்துவாரம் அமைத்து தந்தால் ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீர் கடலில் வெளியேறி, ஆறு மாசடையாமல் சுத்தமான தண்ணீர் இருக்கும். மேலும் மீன்கள் உற்பத்தி அதிகரிக்கும். எனவே ஆற்றில் இறந்துள்ள மீன்களை அரசு உடனடியாக அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories: