மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த நிலையில் சோகம் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: துறைத்தலைவர் டார்ச்சரே காரணம் என தந்தை புகார்

திருச்சி: மருத்துவ மேல்படிப்பு படித்த பெண் டாக்டர், திருச்சி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். துறைத்தலைவர் டார்ச்சர் கொடுத்ததாக தந்தை போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் முஷ்ணம் அம்புஜவல்லிபேட்டையை சேர்ந்த பொன்னிவளவன் மகள் கயல்விழி (31). திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்து விட்டு, அதே கல்லூரியில் தற்போது மேல்படிப்பான எம்எஸ் (ஓஜி) இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் கே பிளாக்கில் 17ம் எண் அறையில் தங்கி இருந்தார். இதற்கிடையில் கயல்விழிக்கும், சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் சக்தி கணேசுக்கும் கடந்த ஜூலை 11ம் தேதி திருமணம் முடிந்தது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் கயல்விழி விடுதியில் தனது அறையில் தூக்கில் தொங்கினார். பக்கத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தவர்கள் பார்த்து கயல்விழியை இறக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், கயல்விழி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து  கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 45 நாட்களில் தற்கொலை குறித்து  ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

.

இந்நிலையில் தந்தை பொன்னிவளவன் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியதாவது:  எனது மகளுக்கு பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் நடந்தது. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. எனது மகள் எம்எஸ் (ஓஜி) சேர்ந்தது முதல் துறைத்தலைவர் மரியாதை இல்லாமல் வாடி, போடி என பேசுவதாக எங்களிடம் தொலைபேசியில் பேசி அழுது வந்தார். மேலும் நான் நினைத்தால் உன்னை பெயிலாக்கி விடுவேன் எனவும் எனது மகளை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். எனவே எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை பதிவாகி உள்ள காட்சிகளை பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அனைத்து மாணவிகளிடமும் விசாரிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த சந்தேகத்தின்பேரிலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: