வேலூரில் இருந்து திருப்பத்தூர் வந்த தமிழக அரசு பஸ்சில் கன்னட முத்திரை பேப்பர் ரோலில் டிக்கெட் விநியோகம்: பயணிகள் அதிர்ச்சி

திருப்பத்தூர்: வேலூரில் இருந்து திருப்பத்தூர் வந்த தமிழக அரசு பஸ்சில்  கன்னட எழுத்துக்கள் மற்றும் முத்திரையுடன் இருந்த பேப்பர் ரோலில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் நேற்று முன்தினம் பயணம் செய்தார். அப்போது கண்டக்டர், அவரிடம் ₹82க்கான மெஷின் மூலம் பிரின்ட் செய்து டிக்கெட்டை வழங்கினார்.  அந்த டிக்கெட் ரோலின் இருபுறமும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ‘கே.ஆர்.எஸ்.டி.சி’ என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், கர்நாடக அரசு போக்குவரத்து கழக முத்திரையும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழக அரசு பஸ் டிக்கெட்களில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பெயர் அச்சிடப்பட்டதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் பணிமனை மேலாளர் குமரனிடம் கேட்டபோது, ‘பேப்பர் ரோலை கண்டக்டர்கள் யாராவது வாங்கி பயன்படுத்தினார்களா என விசாரணை செய்யப்படும். அவ்வாறு பயன்படுத்தியவர் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அரசு பஸ்களில் கண்டக்டர்கள் எலக்ட்ரானிக் மெஷின்களில் டிக்கெட் விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மெஷின்களுக்கு வழங்கும் பேப்பர் ரோல், கோட்ட மேலாளரிடம் இருந்து வழங்கப்படுவதில்லையாம். இதனால் கண்டக்டர்களே தங்களின் சொந்த செலவில் ஒரு பேப்பர் ரோல் ₹20க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேப்பர் ரோலுக்காக அரசு வழங்கும் பணம் எங்கே போகிறது என கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.

Related Stories: