தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கோவையில் 2 பேர் சிக்கினர்

கோவை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் குறிப்பாக, கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, கோவையில் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையை சேர்ந்த சித்திக், கோவை உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த ஜாகீர் ஆகிய 2 பேரை கோவையில்  சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களுக்கு தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த அமைப்பு நிர்வாகிகளுடன் ஏற்கனவே, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு தொடர்பு உள்ளது. அவருடன், மேற்கண்ட 2 பேரும் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும், கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கவைத்து, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: