ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை புகார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

திருப்பரங்குன்றம்: ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றி வருபவர் கர்ணமகாராஜன். இவர் கேரள மாணவி ஒருவருக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக, கர்ணமகராஜன் மீது  அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காததால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பாலியல் புகாரை விசாரிக்க பல்கலைக்கழக விசாரணை  கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி,  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, பேராசிரியர் மீது நடவடிக்கை  எடுக்க பரிந்துரை செய்து, கடந்த பிப்.5ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த ஆக.22ல் துணைவேந்தர்  கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம்  நடந்தது. இதில் பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் பதவிக்கு, பேராசிரியர் கர்ணமகாராஜன் உட்பட 24 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கர்ணமகாராஜன் உட்பட 21 பேரின் விண்ணப்பங்கள் தேர்வாகி, இவர்களில் ஒருவர் பதிவாளராகும் நிலை இருக்கிறது. இந்நேரத்தி–்ல கர்ணமகாராஜனுக்கு பல்கலைக்கழகம் கட்டாய ஓய்வு அளித்திருக்கிறது.  பேராசிரியர் கர்ணமகாராஜன் கூறும்போது, “மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்தவில்லை. என் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி, பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அமைக்கப்படவில்லை. குழுவினர் முறையாக விசாரணை செய்யவில்லை. இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் உள்ள நிலையில் என் மீது இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவாளர் பதவிக்கு நான் போட்டியிட்டு தேர்வான நிலையில், எனக்கு அந்த பதவி கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்தது, பணி நியமன முறைகேடு உள்ளிட்ட பல விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவற்றை எல்லாம் மறைக்கும் நோக்கத்தில் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் பேராசிரியர் முரளி கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பேராசிரியர் கர்ண மகாராஜனை விசாரித்த கமிஷன் முறையாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

காப்பாற்ற முயற்சி

பல்கலைக்கழக பதவியில் இருக்கும் இருவர், பல்கலைக்கழகத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக பணி நியமனம், போலி மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், இவர்களுக்கு நெருக்கம் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை பாயாமல், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: