தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு

நாகை: இலங்கை வழியாக தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக  மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம்,  கோவை சூலூர் விமான படை தளம், கேரளாவில் உள்ள  சபரிமலை மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் விழா ஆகியவற்றை தீவிரவாதிகள்  குறிவைத்து காத்திருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வரும் 29ம் தேதி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, பக்தர்கள் காவி உடை அணிந்து விரதம் இருக்கின்றனர். இவர்கள், 29ம்தேதியன்று நடக்கும் திருவிழாவுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலையடுத்து பேராலயத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலய வளாக எல்லையில் வரும் வாகனங்களும் கண்காணிப்பு கேமரா வாயிலாக சோதனை செய்யப்படுகிறது.

இதுதவிர, வேளாங்கண்ணி முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து 3 டி.எஸ்.பி.  தலைமையில் 200க்கு அதிகமான தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார்  மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150க்கும் அதிகமான உள்ளூர் போலீசார்  வேளாங்கண்ணி வந்தனர். இவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள அனைத்து தனியார்  விடுதிகள், பேராலய விடுதிகள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் என அனைத்து  இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.  நாகை மாவட்ட கடலோர எல்லையில்  உள்ள 6 சோதனை சாவடிகளில் தலா 1 இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் அந்த  வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். வேளாங்கண்ணி  பேராலயத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதார் அட்டை இல்லாமல் அறை ஒதுக்கக்கூடாது என்று லாட்ஜ்,  ஓட்டல் நிர்வாகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி  ஆலயத்தில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ள ஈகிள் வாகனம் மற்றும் வஜ்ரா  வாகனம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி  ஏற்கனவே 140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த  கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அச்சத்தை போக்க வேளாங்கண்ணியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: