மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில வாரங்களாக  வெயில் நீடித்து வந்தது. இதனால் சில இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது.  இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 26.4 மி.மீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 20 மி.மீ, நாகப்பட்டினத்தில் 17.5 மி.மீ, சேலத்தில் 15.2 மி.மீ, ேவலூரில் 10.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல் அதிகபட்ச வெயில் 97.70 டிகிரி பாரன்ஹீட் தூத்துக்குடியில் பதிவானது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் கூறியுள்ளதாவது:தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரவில் மழை
சென்னையில் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. கிண்டி, மயிலாப்பூர், சேப்பாக்கம், மீனம்பாக்கம், நந்தம்பாக்கம்,தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.

Tags : Heavy rain ,4 districts, Western Ghats
× RELATED ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி