தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை

சென்னை: தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி நடந்த தொடர் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தீவிரவாதிகள் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 44க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். அதைதொடர்ந்து நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்தது. அதை கண்டிக்கும் வகையில் தீவிரவாதிகள் இந்தியா மீது விரைவில் பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தனர். மேலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.அதை தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் நேற்று முன்தினம் டிஜிபி திரிபாதி மாநில முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாநகர கமிஷனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து நேற்றும் மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாநில முழுவதும் தேசிய மற்றும் மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிரவாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.ெசன்னையை பொறுத்தவரையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி துணை கமிஷனர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இரவு நேரங்களில் ஆயிரம் போலீசார் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீவிரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளை வெடி குண்டு கண்டறியும் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 


Tags : Terrorist infiltration in Tamil Nadu echoes police protection
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...