டாக்டர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் டாக்டர்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.அரசாணை 354ன்படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியம் டாக்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்படவில்லை. மேலும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் படித்ததும் அந்தந்த கல்லூரிகள் அருகிலேயே பணி வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு இருந்த நடைமுறையை மாற்றி வெவ்வேறு ஊர்களில் பணி வழங்கியுள்ளனர். அதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த மாதம் 29ம் தேதி முதல் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 டாக்டர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, 50க்கும் அதிகமான முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Related Stories: