பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல் நாளை தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: பள்ளிக் கல்வித்துறைக்கான தனி டிவி சேனல் ‘கல்வி தொலைக்காட்சியை’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக ஒரு டிவி சேனல் தொடங்க முடிவெடுக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பணிகள் நடந்து வந்தது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10வது தளத்தில் கல்வித் தொலைக்காட்சிக்கான அலுவலகம், ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாளை முதல் அதிகாரப்பூர்வமாக ‘கல்வி தொலைக்காட்சி’ செயல்பாட்டை தொடங்க உள்ளது.முழுக்க முழுக்க கல்விக்காக தொடங்கப்படவுள்ள இந்த சேனலை தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9 மணிக்கு அ்ண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்  நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு அர்ப்பணிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் ஜெயக்குமார்,  ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷணன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என  ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.  

இதையடுத்து 53 ஆயிரம் பள்ளிகள் இந்த சேனலுடன் இணைக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பாட வல்லுனர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளை டிவியில் பார்க்க, கல்வி தொடர்பான நிகழ்வுகளை மாணவர்களுக்கு காட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைத்து சந்தாதாரர்களும் சேனல் எண் 200ல் கல்வித் தொலைக்காட்சியை பார்க்க முடியும். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் என சுமார் 53 ஆயிரம் பள்ளிகள் இந்த சேனல் மூலம் இணைக்கப்பட உள்ளன. மேலும் அந்த பள்ளிகளில் செப்ஆப் பாக்ஸ் பொருத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட டிவி நாளை மதியம் 3 மணி முதல் 4 மணி  நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை டிவி, புரெஜெக்டர், மூலமாக மாணவர்களுக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட டிவி சேனலின் யு டியூப் மதியம் 2 மணிக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும். மதியம் 3 மணி முதல் 4 மணி கட்டாயம் கல்வித் தொலைக்காட்சியை மாணவர்களுக்கு காட்ட வேண்டும். மாணவர்களுக்கு காட்டப்படுவதை புகைப்படமாக எடுத்து பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தொடர் முதலீடு சாத்தியமா?
ஒரு டிவி சேனல் செயல்படுவது தொடர் முதலீடு தேவை. ஆனால் குறிப்பிட்ட சேனலுக்காக ஏற்கனவே 8 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட டிவி சேனல் செயல்பட ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தொடர் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Separate,TV Channel, School Education, Tomorrow
× RELATED ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி