சிறந்த ரயில் நிலையம் எழும்பூர் : தெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் எழும்பூர் சிறந்த ரயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையங்கள் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 1908ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான ரயில் நிலையம் என்பன உள்பட பல சிறப்புகளை பெற்றுள்ளது.

இதையடுத்து சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சார்பில் தென் இந்தியாவில் சிறந்த ரயில் நிலையம் என, எழும்பூர் ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காகவும், ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.மேலும் பார்சல்களை கையாள்வதிலும் எழும்பூர் ரயில் நிலையம் தென் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சர்வதேச தர நிர்ணய சான்று (ஐ.எஸ்.ஓ 14001:2015) வழங்கி சிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories: