×

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு: நாளை முதல் பணிக்கு திரும்ப முடிவு

சென்னை: பாதுகாப்பு துறை உற்பத்தி செயலாளருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவையடுத்து, பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 88 ஆயிரம் தொழிலாளர்களும், 45 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி, தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. இந்த முடிவை கண்டித்து பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. மேலும் ஒரு மாதம் வேலை நிறுத்தத்திற்காக அழைப்பு விடுத்தனர்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் பாதுகாப்புத்துறை உற்பத்தி துறை செயலாளர் சுபாஷ் சந்திரா தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன்  தொழிற்சங்க பிரதிநிதிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. மேலும், உங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று, வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளனர். நாளை (26ம் தேதி) முதல் பணிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன் பிறகு, 15 நாட்களுக்குள் உயர்மட்ட கமிட்டியில் தொழிலாளர்களின் கோரிக்கையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், மீண்டும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள் என பாதுகாப்புத் துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Security workers,strike suspended,decision,return to work tomorrow
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...