அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏழைகளுக்கான திருமண திட்டம் நிறுத்தம்: அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

சென்னை: அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏழை எளியோர்களுக்கான திருமண திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளியோர்களுக்கு திருமண நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் ஏழை தம்பதிகளுக்கு நான்கு கிராம் தங்க திருமாங்கல்யம் மற்றும் ₹10 ஆயிரம் செலவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2012 ஜூன் 18ம் தேதி 1008 ஜோடிகளுக்கு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதற்காக ₹1.51 கோடி செலவிடப்பட்டது. ஆனால், இந்த திருமணம் நடந்ததில் குளறுபடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும்கட்சியை சேர்ந்த சிலரால்தான் இப்பிரச்னை நடந்ததாக கூறப்பட்டாலும், அறநிலையத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இதற்கிடையே, கடந்த 2012ல் நடந்த சம்பவத்தால் பயந்துபோன அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த அஞ்சியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் அக்கறை காட்டாத நிலையில் திட்டத்தையே அறநிலையத்துறை கைவிட்டு இருப்பதாக தெரிகிறது. இது, அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்து சமயத்தை சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கு நிதி வசதிமிக்க கோயில் உபரி நிதியில் இருந்து திருமணம் செய்து வைக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயன்பெற்றனர். ஆனால், கடந்த 2012ல் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதை அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் விரும்பவில்லை. இதனால், இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலம் ஏழை எளியோர் பயன்பெறுவார்கள்’ என்றார்.

Related Stories: