அண்ணாநகர் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: முறையாக பாடம் நடத்தவில்லை என குற்றச்சாட்டு

சென்னை:  அண்ணாநகரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் முறையாக வகுப்புகள் எடுக்கவில்லை என கூறி அங்கு பயிலும் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவு, 5 வது அவுன்யூ டி.செக்டார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இவர்களுக்கு முறையான வகுப்புகள் எடுக்கப்படவில்லை என கூறி நேற்று காலை முதல் பயிற்சி மையத்தில் வகுப்புகளை புறக்கணித்து பயிற்சி மையத்தின் முன்பு பெற்றோருடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், “மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு முக்கியம் என்பதால் 12-ம் வகுப்பு முடித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் இங்கு சேர்ந்து படித்து வருகின்றனர். 10 மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் கட்டணமாக ₹1 லட்சம் முதல் ₹1.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பலர் மொத்தமாகவும், இரண்டு தவணையாகவும் கட்டணங்களை செலுத்தி விட்டனர். முறையாக வகுப்புகள் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது இல்லை. இதனால் கடந்த இரண்டு மாதமாக வகுப்புகள் எடுக்காததால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், மாணவர்களை தரக்குறைவாக பேசி வருகின்றனர். இதனால் தாங்கள் செலுத்திய கட்டண தொகையை திருப்பி தருமாறு கேட்டதற்கு இதுவரை கட்டணத் தொகையை தராமல் இழுத்தடித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். அதற்கும் தனியாக கட்டணம் செலுத்தப்படுகிறது. கடினமான நிலையில் பிள்ளைகளுக்கு பெரும் தொகையை கட்டணமாக செலுத்தி படிக்கவைக்கும் நிலையில் முறையாக வகுப்புகள் எடுக்காததால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 மேலும் இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு பயிற்சி மையம் சம்பள பாக்கி வைத்துள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். சம்பள பிரச்னையால் மாதம் தோறும் புதிய ஆசிரியகள் மற்றும் ஊழியர்கள் வருவதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது. நாங்கள் கட்டிய கட்டண தொகையை தரவேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். காலை முதல் பயிற்சி மையத்தின் சார்பில் எந்தவித பதிலும் வராததால் ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த பயிற்சி மையத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றி விட்டு நுழைவாயிலை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: