அருண்ஜெட்லி மறைவு இந்திய அரசியல் உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் அருண்ஜெட்லி. கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர். அருண் ஜெட்லி மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சி தொண்டர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ராமதாஸ் (பாமக நிறுவனர்): மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண் ஜெட்லி  உடல் நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். இந்த நிலையில்  அவர் காலமானார் என்ற செய்தியை தாங்கி கொள்ள முடியவில்லை. அருண்ஜெட்லியின்  மறைவு பாஜகவுக்கு பெரும் இழப்பாகும்.

வைகோ (மதிமுக பொது செயலாளர்): அருண் ஜெட்லி இயற்கை எய்திய செய்தி அறிந்து  வருந்துகிறேன். ஆளுமைத் திறம் மிக்கவர்; பிரச்னைகளை அலசி ஆராய்ந்து,  விரைவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்; எனக்கு நல்ல நண்பர்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): நிதி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், நீதித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும், மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக சிறப்பான முறையில் செயல்பட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்): அருண் ஜெட்லி கட்சிக்கும் சரி ஆட்சிக்கும் மிகப் பெரிய தூணாக  விளங்கியவர். அவரின் மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு.  நாம் மக்களுக்காக  சேவை செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக  இருக்கும்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): பன்முகத்தன்மை கொண்ட அருண் ஜெட்லி  காலமானது, அவரது குடும்பத்தினருக்கும், பாஜகவிற்கும், நாட்டிற்கும்  பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாஜகவிற்கும்,  உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொது செயலாளார்): அருண்ஜெட்லி மறைந்த செய்தி  அறிந்து வருத்தமுற்றேன். மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில்  அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர்.

சரத்குமார் (சமக தலைவர்): அருண் ஜெட்லியின் இழப்பு, பாஜகவிற்கு மட்டுமல்லாமல் அரசியல் உலகிற்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பாஜகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்) சிறுபான்மை மக்களின் குறை  தீர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்று திகழ்ந்தவர். கடந்த  காலங்களில் ஹஜ் பயணத்துக்காக அத்தனை கோப்புகளிலும் தயக்கம் காட்டாமல்  கையெழுத்திட்டவர். அவரது மறைவு இந்திய அரசியல் உலகில்  ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை அவரால் மட்டுமே இட்டு நிரப்ப  முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. வி.எம்.எஸ்.முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் அருண் ஜெட்லி.  வழக்கறிஞராக, பொருளாதார நிபுணராக, அமைச்சராக, அரசியல்வாதி என பன்முக  தன்மையுடன் செயல்பட்டவர். அவரின் இழப்பு அவரை சார்ந்த கட்சிக்கும்,  தொண்டர்களுக்கும் பேரிழப்பு ஆகும்.

Related Stories: