காஷ்மீர் நிலைமையை நேரில் கண்டறிய சென்ற எதிர்க்கட்சி குழுவுக்கு அனுமதி மறுப்பு: ராகுல் தலைமையில் வந்த தலைவர்கள் ஸ்ரீநகரில் தடுத்து, டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை அறிய சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழு நகரில் தடுத்து, டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன், அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காஷ்மீர் எம்பியான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் அங்குள்ள நிலவரத்தை அறிய சென்றபோது நகரில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய 12 பேர் கொண்ட எதிர்க்கட்சியினர் நேற்று ஸ்ரீநகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திமுக எம்பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி, லோக்தந்திரிக் ஜனதா தளம் சார்பில் சரத்யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா உள்ளிட்டோர் ஸ்ரீநகர் சென்றனர். அவர்களை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் வெளியே செல்ல அனுமதி மறுத்தனர். மேலும் ராகுல் உள்ளிட்டோரை டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் அரசியல் தலைவர்கள் இங்கு வருவது நல்லதல்ல. அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் காஷ்மீர் வந்த தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கவும், காஷ்மீரில் அமைதி திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம்

மத்திய  அரசு கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை  ரத்து செய்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக செல்போன் சேவை மற்றும்  இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு உள்பட கடும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நிலைமை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து  தொலைபேசி சேவை சில இடங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஸ்ரீநகரில் மட்டும் சில இடங்களில் கம்பி வேலிகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னர்  பொதுமக்கள் செல்ல  அனுமதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: