×

மேற்குவங்க இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா ஒப்புதல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க அதன் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மேற்குவங்கத்தில் கலியாகஞ்ச், காரக்பூர் மற்றும் கரீம்பூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், கரீம்பூரில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி  முன்னணியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு குறித்து  மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து,  இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் முடிவை தெரிவித்தார். இதற்கு சோனியா காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ கட்சியின் முன்னேற்றத்தை தடுக்க எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என, முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து இடைத்  தேர்தலை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்  கூட்டணி அமைக்க சோனியா ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘பா.ஜ.வை எதிர்க்கிறோம் என்ற பெயரில், நாங்கள் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாது’’ என்றார்.



Tags : West, by-election,Communist Parties,coalition
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...