தகுதி நீக்க எம்எல்ஏக்கள் விவகாரத்தை டெல்லிக்கு கொண்டு வரக்கூடாது: கர்நாடக முதல்வரிடம் பாஜ மேலிடம் அதிரடி

பெங்களூரு: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்பட்ட  எம்எல்ஏக்களின் எதிர்க்காலம் தொடர்பான எந்த விஷயத்தையும் பாஜ தலைமைக்கு கொண்டு வரக்கூடாது என்று முதல்வர் எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம்  தடை  விதித்து உத்தரவிட்டுள்ளது.காங்கிரஸ் - மஜத கூட்டணியை கவிழ்க்க பாஜவுக்கு உதவி செய்த அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.  சபாநாயகரின் பதவி பறிப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 17  பேரும் தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. மனுவை  விசாரணை பட்டியலில் சேர்க்கும்படி வக்கீல்கள் மூலம் மேற்கொண்டுவரும்  முயற்சியும் தோல்வியில் முடிந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்காக டெல்லி சென்ற முதல்வர்  எடியூரப்பா, அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால் வெறுங்கையுடன் பெங்களூரு  திரும்பியுள்ளார். இதன் காரணமாக புதிய  அமைச்சர்கள் பொறுப்பேற்று 6 நாட்கள் கடந்தும் துறைகள் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது.இதற்கிடையில், மத்திய அமைச்சரும், பாஜ செயல் தலைவருமான ஜே.என்.நட்டா மூலம்  முதல்வர் எடியூரப்பவுக்கு அமித்ஷா பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கர்நாடக மாநில  பாஜவில் நிலவும் சின்ன சின்ன பிரச்னைகளை எல்லாம் டெல்லிக்கு  கொண்டு வர  வேண்டாம். குறிப்பாக  மஜத-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட 17 பேரின்  பிரச்னையை பாஜ மேலிடத்திடம் கொண்டு வரக்கூடாது. அவர்களுக்கு ஏதாவது  வாக்குறுதி கொடுத்திருந்தால், அதை நீங்களே நிறைவேற்றுவது அல்லது  விட்டு  விடும் முடிவை எடுக்க வேண்டும்’’ என்பது உள்பட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

Related Stories: