டெல்லி திருப்பதி தேவஸ்தான கோயிலில் 5 கோடி ஊழல் ஆந்திர ரெசிடென்சி கமிஷனர் ராஜினாமா

திருமலை: டெல்லி திருப்பதி தேவஸ்தான கோயிலில் 5 கோடி ஊழல் புகாரில் ஆந்திர ரெசிடென்சி கமிஷனர் ராஜினாமா செய்ததாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெல்லியில் தகவல் மையம் மற்றும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு நடைபெற்ற உற்சவங்கள் மற்றும் பிரமோற்சவத்தின் போது பூஜை பொருட்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளை  செய்வதற்காக உள்ளூர் வளர்ச்சி குழு கமிட்டி மற்றும் அங்குள்ள அதிகாரிகள் இணைந்து ₹5 கோடிக்கு ஊழல் செய்ததாக பக்தர் ஒருவர் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதுகுறித்து விஜிலன்ஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் உள்ள தேவஸ்தான கோயிலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட உள்ளூர் வளர்ச்சி குழு கமிட்டி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த புகாரை அடுத்து முதல்வர் ஜெகன்மோகனுடன் ஆலோசித்த பின்னர்  விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் டெல்லி கோயில் உள்ளுர் குழு தலைவரும், ஆந்திர மாநில ரெசிடென்சி கமிஷனருமான பிரவீன்  பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே மாநில அரசு நியமித்த விசாரணைக் குழு அதிகாரிகளை விசாரணை செய்யவிடாமல் தடுக்கும் அனைத்தும் செயல்களும் நடைபெற்று வருவதால் கோப்புகளை வழங்க முடியாது  என பிரவீன் பிரகாஷ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விசாரணைக் குழுவை அமைக்க கூடாது என மாநில அரசுக்கு பல்வேறு விதமாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதேபோல், டெல்லி  தேவஸ்தான கோயிலில் பணிபுரியக்கூடிய மூத்த அதிகாரி ஒருவர் சுவாமி வீதிஉலா வருவதற்கான வாகனம் தயார் செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து நிபந்தனைகளை மீறி நன்கொடைகளை வசூல் செய்து அவரே சொந்தமாக வாகனங்களை  தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: