திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னப்பிரசாத அறக்கட்டளை நன்கொடை 1,100 கோடியாக உயர்வு: ஆண்டுதோறும் 100 கோடி வரை கிடைக்கிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கான நன்கொடை 1,100 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடை ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி வரை  கிடைப்பதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப்புகழ்பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான திட்டத்தை, அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் 1985ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.  முதலில் இத்திட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக  வெங்கடேஸ்வரா நித்ய அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்படுத்தினார். அறக்கட்டளை தொடங்கப்பட்டதும்  முதலில் அன்னதான திட்டத்துக்கு 1985ம் ஆண்டு ராமய்யா என்னும் பக்தர் 5 லட்சம் நன்கொடை வழங்கினார். முதலில் பக்தர்களுக்கு புளியோதரை வழங்கப்பட்டு வந்த நிலையில் 1987ம் ஆண்டு முதல் மதியம் மற்றும் இரவு நேரங்களில்  அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

2007ம் ஆண்டு வரை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2007ம் ஆண்டு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக இருந்த கருணாகரரெட்டி  சுவாமி தரிசனம் செய்தாலும், செய்யாவிட்டாலும்  திருமலைக்கு வரக்கூடிய அனைவருக்கும் இலவசமாக அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேருக்கு ேமல் நித்ய அன்னதான  திட்டத்தின் கீழ் உணவருந்தி வந்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால் பழைய அன்னப்பிரசாத கூடத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய சிறப்பு அதிகாரியாக இருந்த தர்மாரெட்டி தலைமையில் ₹25  கோடியில் 4 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அன்னப்பிரசாதம் சாப்பிடும் வகையில் தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னப்பிரசாத கூடம் கட்டப்பட்டது.  இந்த நிலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1985ம் ஆண்டு முதல் தற்போது வரை 37 ஆயிரத்து 169  பக்தர்கள் 1 லட்சத்துக்கு மேல் நன்கொடை வழங்கி உள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு 100 கோடி வரை நன்கொடையாக கிடைக்கிறது.

ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது முதல் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு வரை  பக்தர்கள்  வழங்கிய நன்கொடையின் மதிப்பு 1,100 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நன்கொடையின் மூலமாக  தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னப்பிரசாத பவன், தரிசனத்திற்காக காத்திருக்கக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறைகள்,  வரிசையில் சென்று கொண்டிருக்கும் பக்தர்களுக்கும், 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பத்மாவதி அன்னப் பிரசாத  பவன், திருப்பதியில் உள்ள தேவஸ்தான, அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர பிரமோற்சவ நாட்களில் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தினந்தோறும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 65  ஆயிரம் பேர் வரை வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாத அறக்கட்டளை மூலம்  அன்னதான திட்டத்தில் உணவருந்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த காய்கறி நன்கொடையாளர் சங்கத்தினர் ஒவ்வொரு நாளும் 8 டன் காய்கறிகளை  நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதில் சென்னை, திருப்பூர், வேலூர்  உட்பட காய்கறி நன்கொடையாளர்கள் சங்கத்தினரின் பங்கு மிகவும் பெரியது.  இதேபோன்று ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு  அதாவது 44க்கு விற்பனை செய்யக்கூடிய அரிசியை 37க்கு வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டத்தில் சிறப்பு அதிகாரி தர்மாரெட்டியின் வேண்டுகோளை ஏற்று 375 குவின்டால் அரிசியை இலவசமாக வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும்  சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி ஒவ்வொரு முறையும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தேவஸ்தானத்திற்கு அரிசி வழங்கும் போது நன்கொடையாக அரிசி வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  அவரது வேண்டுகோளின்படி  நன்கொடையாளர்கள் மூலம் அரிசி கிடைத்தால், தற்போது அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்காக தினந்தோறும் 8 டன் காய்கறிகள் நன்கொடையாக பெற்று பக்தர்களுக்கு தரமான சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்படுவது ேபால், தரமான  அன்னப்பிரசாதத்தை தொடர்ந்து  வழங்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாத அறக்கட்டளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து செயல்படும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: