திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் டெபிட் கார்டு மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் வசதி: மின்வாரியத்துக்கு நுகர்வோர் கோரிக்கை

சென்னை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை பணம், வங்கி காசோலை, வரைவோலை, இணையதளம், கிரெடிட், டெபிட் கார்டு என ஏதேனும்  ஒன்றின் வாயிலாக செலுத்தலாம்.மின் கட்டண மையம் தவிர்த்து, தபால் நிலையம், அரசு இ-சேவை மையம், சில வங்கி கிளைகளில் மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால், பெரும்பாலானோர், மின் கட்டண மையங்களில் பணமாகத்தான் கட்டணம்  செலுத்துகின்றனர்.

இதனால், அந்த மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மின் அலுவலகங்களில் உள்ள மின் கட்டண மையத்தில் மக்கள் மின் கட்டணத்தை  செலுத்துகின்றனர். இந்த நிலையில், மின் கட்டண மையங்களில், ‘’டெபிட் கார்டு’’ மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை துவக்குமாறு மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நுகர்வோர்கள் கூறுகையில், மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால், சில்லரை இல்லை என கூறி அலைக்கழிக்கின்றனர். எனவே, அந்த வசதியை மின் கட்டண மையங்களில் மின் வாரியம்  துவக்க வேண்டும் என்றனர்.

Related Stories: