20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டியெடுக்கும் அவலம் மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் செய்யாறு: காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் காட்டில் பண மழை

செய்யாறு: மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் செய்யாற்று படுகையை மீட்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.வடஇந்தியாவை போன்றே வளமான நதிகளை கொண்டது தமிழகம். சங்க கால இலக்கியங்கள் தொடங்கி, நவீனகால இலக்கியங்கள் வரை தமிழகத்தின் நீர்நிலைகளின் வளமையை குறிப்பிடுகின்றன.ஆனால் தற்போதைய தமிழ்நாட்டின் நிலை  நம்மை மட்டுமல்ல, விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆற்றுப்படுகைகள் நாசமாக்கப்படுவதில் பாலாறும், அதன் பிரதான துணை நதியான செய்யாறும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.இந்த இரண்டு ஆறுகளுமே மழைநீரை நம்பியிருப்பவை. பாலாறு கர்நாடகத்தில் சென்னகேசவ மலைத்தொடரில் நந்திமலையில் உற்பத்தியாகி தமிழகத்துல் 222 கி.மீ தூரம் பாய்ந்து செங்கல்பட்டு அருகே கடலில் கலக்கிறது. இதில் கர்நாடகம்,  ஆந்திரம் என்ற அண்டை மாநிலங்களின் தடுப்பணைகள் பாலாற்றின் மழைக்கால நீர்வரத்தையும் தடை செய்ய மணல் கொள்ளையர்களின் சொர்க்க பூமியாகி இன்று கட்டாந்தரையாகி, கழிவுநீரும், குப்பைகளும் நிரம்பி முட்புதர்களாக மாறி  பரிதாப நிலையில் காட்சி அளிக்கிறது. அதேவேளையில் மணல் கொள்ளையும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் சேயாறு எனப்படும் செய்யாறு ஜவ்வாது மலைத்தொடரில் தோன்றி, மேற்கு, தெற்காக பாய்ந்து பின்னர் செங்கம் அருகில் வடகிழக்காக திரும்பி, திருவண்ணாமலை  மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையில் இருந்து கிழக்காக பாயும் பீமன் ஆறு (பீமன் அருவியில் இருந்து உருவாவது), மிருகண்டா நதி (மிருகண்டா அணையில் இருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள்,  போளூருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாற்றில் இணைகின்றன.

ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள ஜவ்வாது மலைத்தொடரின் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் உருவாகும் கமண்டல நாகநதி எனும் துணை ஆறும், அமிர்தி அருகில் வரும் நாகநதி ஆறும், ஆரணி அருகே இணைந்து, கமண்டல  நாகநதியாகி வாழைப்பந்தல் அருகில் செய்யாற்றுடன் இணைகிறது. அங்கிருந்து ஒரு கி.மீ. அகலத்தில் விரிவடையும் செய்யாறு வடக்கு, கிழக்காக ஓடி, காஞ்சிபுரம் அடுத்த பழைய சீவரம் எனும் ஊரில் பாலாற்றுடன் இணைந்து வங்காள  விரிகுடா கடலில் கலக்கிறது. செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், மாவட்டத்தின் முக்கிய நகரங்களான போளூர், ஆரணி மற்றும் செய்யாறு எனப்படும் திருவத்திபுரம் நகரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு  திருவண்ணாமலை மாவட்டத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் செய்யாறு வேளாண் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செய்யாறு இன்று மணல் கொள்ளையர்களின் பிடியில்  சிக்கியுள்ளது. தொடரும் மணல் திருட்டால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு செய்யாற்றுப்படுகையின் நிலத்தடி நீராதாரமும் கேள்விக்குறியாகி குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. செய்யாற்றை அடிப்படையாக கொண்டு காழியூர்- அத்தி கூட்டு குடிநீர் திட்டம், சேத்துப்பட்டு, ெதள்ளார், அப்துல்லாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக, செய்யாற்றில் கிணறுகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆரணி, வந்தவாசி, செய்யாறு, சேத்துபட்டு, கலசபாக்கம், செங்கம் ஆகிய வட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்யாற்றின் தற்போதைய நிலையோ மிகப் பரிதாபமாக உள்ளது. இந்த ஆற்றில் இருந்து அருகாவூர், பெரும்பள்ளம், செய்யாற்றைவென்றான், அனக்காவூர், அனப்பத்தூர், காழியூர், வேளியநல்லூர், அத்தி,  மடிப்பாக்கம், இளநீர்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், தினமும் பகிரங்கமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு, செய்யாறு, அனக்காவூர், தூசி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள செய்யாறு- ஆற்காடு சாலை, செய்யாறு- வந்தவாசி சாலை, செய்யாறு-  ஆரணி சாலை, காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை வழியாகவே மணல் கடத்தல் லாரிகள் செல்கிறது. இந்நிலையில், செய்யாறு போலீஸ் ஸ்டேஷன் அருகில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அருகாவூர் பகுதியில் சாலை அமைத்து, சுமார் 20 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் பள்ளம் எடுத்து இரவு, பகல் என பாராமல் மணல் கொள்ளை  அடிக்கப்படுகிறது. இதுதவிர செய்யாற்றைவென்றான், அருகாவூர், பெரும்பள்ளம், வேளியநல்லூர், காழியூர், மடிப்பாக்கம், காரணை, ஆக்கூர் உள்ளிட்ட 13 கிராமங்களிலும், பாலாற்று படுகையில் உக்கல், பாவூர், உக்கம்பெரும்பாக்கம், தாலிக்கால், வெள்ளாகுளம்,  வெங்களத்தூர், வடஇலுப்பை, பிரம்மதேசம், புதுப்பாளையம், கனிகிலுப்பை போன்ற  கிராமப் பகுதிகளில் 20 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் அள்ளப்பட்டுள்ளது.  கேட்க ஆட்களே கிடையாது என்ற நிலையில் மாமூல் கொடுக்காமலேயே எல்லை மீறி லாரிகளில் மணல் கடத்திச் சென்றனர். இதனால் நீராதார கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் பாராபட்சமன்றி கொள்ளையர்கள் மணலை அள்ளிச்  சென்றனர்.இதுகுறித்து மாட்டுவண்டியில் மணல் அள்ளுபவர்கள் கூறியதாவது:

காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களை மட்டுமே மடக்கி பிடிக்கின்றனர். லாரியில் மணல் அள்ளுபவர்களை விட்டுவிடுகின்றனர். நாங்கள் செய்வது தவறுதான். எங்களால் ஒரு நாளைக்கு  இரவு நேரத்தில் ஒரு வண்டி மணல்தான் அள்ளிச்செல்ல முடியும். ஆனால், இட்டாச்சி மற்றும் பொக்லைனை வைத்து ஒரு இரவில் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுபவர்களை கண்டு கொள்வதில்லை. ஒரு லாரி மணல் ₹30  ஆயிரத்தில் இருந்து ₹35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

ஒரு மாட்டு வண்டி மணல் ₹1,500 தான் என்பதால், மணல் தேவைப்படுபவர்கள் மாட்டு வண்டிக்காரர்களையே நாடுகின்றனர். இதனால் லாரியில் மணல் கடத்துபவர்களுக்கு வருவாய் குறைந்து போகிறது என்பதால், மாட்டு வண்டிகளில் மணல்  அள்ளாமல் தடுக்க, போலீசாருக்கு அதற்கெண்று தனியாக மாமூல் கொடுக்கின்றனர் என்றனர்.ஆனால் போலீஸ் தரப்பிலோ, ‘ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறையினர்  கண்டுகொள்வதே இல்லை என்றும், மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து வருவாய்த்துறையில்  ஒப்படைத்தால், அவர்கள் ஒரு வாரம், இருவாரத்திற்குள்ளாகவே விடுவித்து விடுகின்றனர். இதனால், மணல்  கொள்ளையர்கள் தைரியமாக தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு  லாபம் பார்த்து வருகின்றனர்.   

செய்யாற்றின் நடுப்பகுதிக்கே லாரிகள் செல்லும் அளவுக்கு பாதையை அமைத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடின்றி மணலை நிரப்பி கடத்தி செல்கின்றனர். தண்ணீர் கொண்டு செல்ல ஆற்றில் பல  அடி ஆழத்துக்கு புதைக்கப்பட்ட குழாய்கள் வெளியே தெரியும் அளவுக்கு, மிக ஆழமான பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு, மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் இங்கு மட்டும் சுமார் 6,135  ஏக்கர் நிலப்பரப்பில் பாசன வசதி அளித்து வந்த  செய்யாறு தற்போது வறண்டு காணப்படுவது பொதுமக்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்டிஓ, டிஎஸ்பி ஆகியோர் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? இல்லை, மாமூலாக பைலை மட்டும் பார்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எனவே,  மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

புகார் தெரிவித்தால் மிரட்டல்

இந்த மணல் கொள்ளை குறித்து வருவாய்த்துறையினரிடமும், காவல்துறையினரிடமும் புகார் தெரிவித்தால் அதனை  தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடம்  அந்த புகாரை வைத்தே காசு  பார்க்கின்றனர். அதனால் கிராம மக்களே, மணல்  கொள்ளையில் ஈடுபடுபவர்களை தடுத்து தட்டிக்கேட்டால், நாங்கள் அனைவருக்கும்  பைக், மாட்டுவண்டி, ஆட்டோ, லோடு ஆட்டோ, டிராக்டர், லாரி என  வருவாய்த்துறையினர்  நிர்ணயித்துள்ள மாமூல் கொடுத்துவிட்டுதான் மணலை  அள்ளிச்செல்கிறோம், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என  மிரட்டுகின்றனர். மணல் கொள்ளையை தடுக்கச் சொல்லி மாவட்ட  உயரதிகாரிகள் உத்தரவிட்டாலும்,  அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் ஆய்வாளர்,  கிராம நிர்வாக அலுவலர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துபவர்களிடம்  கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு மணல் கொள்ளைக்கு அனுமதிப்பதாகவும், இரவு  நேரங்களில்  லாரிகள் மற்றும் டிராக்டரில் மணல் கடத்தும் அரசியல்வாதிகளை  கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: