ஆயுத தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற ஒப்புதல் ஆவடியில் பணிபுரியும் 10,000 பேர் கதி என்ன?

* ஒரு மாதமாக போராடியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு

* பிஎஸ்என்எல் நிறுவனத்தை போல் சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் 16 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு சுதந்திர இந்தியாவிற்கு பிறகு அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு காலத்தில் கூடுதலாக 25 பாதுகாப்பு  துறை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 41 பாதுகாப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 88,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 45,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.ராணுவத்துக்கு தேவையான குண்டூசி முதல் பீரங்கிவரை அனைத்து தளவாட பொருட்களும் பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளில் தான் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருந்தது. இந்தியா 5 போர்களை சந்தித்துள்ளது.  1961 சீனாவுடன் நடந்த போரில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 1999 கார்கில் போரில் இந்தியா பெறும் வெற்றி பெற்றது. இதற்கு பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் இருந்து சரியான நேரத்தில் தரமான தளவாடங்களை வழங்கியது  ஒரு காரணம் என்று அப்ேபாது கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் உலக அளவில் ஆயுத தளவாட உற்பத்தி நாடுகளில் உள்ள பட்டியலில் இந்தியா 37வது இடத்தை வகித்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 6 பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஆவடியில் 1961ம் ஆண்டு நவம்பரில் படைத்துறையின் உடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது (ஒசிஎம்). அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டேங்க்  பேக்டரி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டு இன்ஜின் பேக்டரி தொடங்கப்பட்டது. மேலும் திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவல் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இதோடு  மட்டுமல்லாமல் உபி அரவன் காட்டில் வெடி மருந்து தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆவடியில் உள்ள படைத்துறையின் உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இந்தியன் பேக்டரி ஆகியவற்றில் நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். படைத்துறையின் உடை  தொழிற்சாலையில் முப்படைகளுக்கு தேவையான போர்கால சீருடைகள், பாராசூட் புல்லட் புரூப், டெண்ட், குண்டு துளைக்காத சீருடை, தீப்பற்றாத ஆடைகள் உட்பட 650 தளவாடப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.ஆவடி டேங்க் பேக்டரியில் இந்தியா ரஷ்யா கூட்டு தொழில் நுட்பத்தில் அர்ஜுன் பீரங்கி டி-72, டி-90 தயாரிக்கப்படுகிறது. மேலும் தற்போது நேரடியாக இந்திய தொழில் நுப்பத்தின் மூலமாகவும் பீரங்கி தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்ஜின் பேக்டரியில் பீரங்கிக்கு தேவையான அனைத்து இன்ஜினும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக்கி (கார்ப்பரேஷன்) தனியார்மயமாக்க மத்திய அரசு  முயற்சி செய்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது.இதனை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடியில் உள்ள 3 பாதுகாப்பு துறையை சேர்ந்த தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த  20ம் தேதி முதல் ஒரு மாதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திருச்சி, ஊட்டியில் உள்ள தொழிற்சாலையிலும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் 1.70 லட்சம்  ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. பொதுத்துறை நிறுவனமானால் இந்த நிலங்களை கையகப்படுத்தி அதனை உள்நாடு வெளி நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடக்கிறது.இந்த நிறுவனங்கள் கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டால் தொழிலாளர்கள் பல போராட்டத்தில் பெற்ற உரிமைகள் பறிக்கப்படும். பதவி உயர்வு பதவி மூப்பு அடிப்படையில் என்பதற்கு பதிலாக உயர் அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.  மேலும் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் வரக்கூடிய சலுகைகள் கிடைக்காது, அதோடு மட்டுமல்லாமல் சம்பள மாற்றமும் கிடையாது.இதிலிருந்து அடுத்த நிலையான தனியார் மயமாக்கப்பட்டால் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முழுக்க முழுக்க நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும். இதனால் நம்முடைய வாழ்வாதாரம் பல  ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்து உள்ளது. ஆவடியில் மூன்று தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் தொழில்வரி வருகிறது. ஆது ஆவடி மாநகராட்சிக்கு பெரும் பங்களிப்பாகும். இந்த தொழிற்சாலைகள் தனியார் மயமானால்  கிடைக்க வேண்டிய வரி வருவாய் பெரும் இழப்பாகும். இதனால் ஆவடி நகர மக்களின் அடிப்படை வசதிகளும் பாதிக்கப்படும். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை சார்ந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் வியாபாரத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தனியார் மையமானால் வியாபாரிகளுக்கு வருவாய் இழந்து அவர்களுக்கு வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெரும் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற முடியுமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இங்கு பணியாற்றும் இளைஞர்கள்  தங்களது திருமணம் சகோதர, சகோதிரிகளின் திருமணத்துக்கு வாங்கிய கடன்களின் மாதக்கடன்களை எப்படி கட்டுவது என்ற கவலையில் ள்ளனர். எனவே பாதுகாப்புத்துறை ஊழியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்தும்  எல்லையோரப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையை உணர்ந்தும் மத்திய அரசு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களின் மாற்று ஆலோசனைகளை பரிசீலனை செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தேசிய பாதுகாப்புத்துறை தொழிலாளர் முன்னேற்ற சம்மேளனத்தின் பொதுச்செயலாளார் வி.வேலுசுவாமி கூறியதாவது:பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றினால் என்ன நடந்துள்ளது என்பதற்கு தொலைத் தொடர்பு துறை (பிஎஸ்என்எல்) ஓர் உதாரணமாகும். பிஎஸ்என்எல்லை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அரசு  ஊழியர்களை விட அதிக சம்பளம் தருவதாக அரசு ஆசை வார்த்தை காட்டியது. தற்போது பிஎஸ்என்எல் மாதா மாதம் சம்பளம் தருவதே நிச்சயமற்ற நிலையாக இருந்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆறு மாத காலம் சம்பளம்  வரவில்லை. பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைபேசி நிறுவனத்துடன் போட்டி போடும் அளவுக்கு எந்த வாய்ப்பையும் மத்திய அரசு கொடுக்கவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை கார்ப்பரேஷனாக மாற்றிய மத்திய அரசு, தனியாருக்கு வழங்கிய 4ஜி அலைக்கற்றையை கூட வழங்காமலும், வங்கி கடன்களை மறுத்தும் செயற்கையாகவே நலிவடைய செய்து விட்டது. இதன் மூலம் அந்த  நிறுவனத்தை தனியார் மையமாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே கார்ப்பரேஷன் மையம் என்பது தனியார் மையத்தின் முதல்படி என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தங்களுக்கும் இந்த நிலை  வரக்கூடாது என்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.2024-25 ஆம் ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடி அளவுக்கு ராணுவ தளவாட உற்பத்தி தேவைப்படுகிறது என்பதை மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் பாதுகாப்பு துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக்கினால் தான் இந்த உற்பத்தி  சாத்தியம் என அரசு கருதுகிறது. கடந்த கால அனுபவத்தில் ராணுவத்தின் முப்படைகளையும் சேர்த்து சராசரியாக 14,000 கோடிக்கு மேல் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்நிலையில் ஏற்றுமதிகளையும், ஏற்றுமதிக்கான 6,000  கோடி உற்பத்தியை சேர்த்துக் கொண்டாலும் மீதியுள்ள 10,000 கோடி உற்பத்தியை யாரிடம் வாங்குவது என படைகலன் வாரியத் தலைவர் சவுரவ் குமார் கூறிய செய்தி பத்திரிகையில் வெளியாகி உள்ளது. எனவே பாதுகாப்புத்துறை  நிறுவனங்களை நாட்டின் நலன் கருதி தொடர்ந்து அரசு நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்

பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் 650 தளவாடப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பீரங்கி, துப்பாக்கி, போர்க்கால சீருடைகள், பைனாக்குலர்கள், ஏவுகணை உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. இதில் 275 தளவாடப் பொருட்களை  முக்கியத்துவம் அற்றது என அரசு அறிவித்துள்ளது. அவற்றை அரசின் உரிமம் பெறாமலேயே தனியார் உற்பத்தியை அனுமதித்துள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

Related Stories: