ஆழ் கடலில் மீன்பிடித்தல் சட்டத்தில் திருத்தம் வருகிறது மாநிலங்களுக்கான அதிகாரம் பறிபோகும் அபாயம்: படகுகளுக்கு மீன்பிடி அனுமதியையும் இனி மத்திய அரசே வழங்கும்

நாகர்கோவில்: ஆழ்கடலில் மீன்பிடித்தலில் மத்திய அரசு கொண்டுவர உள்ள சட்ட திருத்தம் காரணமாக மாநிலங்களுக்கான அதிகாரம் பறிபோகும் அபாயம் உள்ளது. இதன் மூலம் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதியையும் இனி மத்திய  அரசே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 13 கடலோர மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். 6 ஆயிரம் விசைப்படகுகள், 40 ஆயிரம் நாட்டு படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

 மீனவர்களின் மீன்பிடி தொழில் தொடர்பாகவும், கடற்கரை மேலாண்மை தொடர்பாகவும் மத்திய அரசு அவ்வப்போது சட்ட திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. அந்த  வகையில் மீன்பிடித்தல் தொடர்பாக புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்து மத்திய அரசு மாநிலங்களிடம் இது தொடர்பான கருத்துக்களை கேட்டுள்ளது.மத்திய அரசின் மீன்பிடித்தல் கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்ட திருத்தம் மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் நிலை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு  வருகின்ற அதிகாரமும் இதனால் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஆழ்கடலில் கரை பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் வரையுள்ள கடல் பரப்பில் உள்ள கட்டுப்பாடுகள், அதிகாரம் அனைத்தும் அந்தந்த மாநில அரசை சார்ந்தது ஆகும். இது இந்திய அரசமைப்பு சட்டம் வாயிலாக மாநிலங்களுக்கு  வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். இந்தநிலையில் புதிய சட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது இந்த உரிமையும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்தான் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதே வேளையில் ஆழ்கடலில் சென்றாலே மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்கிறது. எனவே ஆழ்கடலில் மொத்தம் 36 நாட்டிக்கல் மைல் தூரம் வரை வரை மீனவர்களுக்கு மீன்பிடித்தலுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மாநில அரசுகள்  நிர்வாகம் செய்ய ஏதுவாக அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் இதனை பரிசீலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் எல்லைக்கட்டுப்பாடு ஏதுமின்றி பெரு நிறுவனங்கள், கம்பெனிகள் கடலில் மீன்பிடி தொழில் செய்ய அனுமதி வழங்கும் வகையில் சட்டத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீன்கள் பதப்படுத்துதல், ஏற்றுமதி தொடர்பான  விஷயங்களில் மட்டுமே கம்பெனிகள் செயல்படுகின்றன. அதே வேளையில் மீன்பிடித்தல் தொடர்பான தொழிலில் கம்பெனிகள் இதுவரை செயல்படவில்லை. கடலில் மீன்பிடித்தல் உரிமைகளையும், அனுமதியையும் அந்தந்த மாநில அரசுகளே  விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மீன்பிடி தடைகாலம் தொடர்பான கட்டுப்பாடுகளும் மாநில அரசால் விதிக்கப்படுகிறது. புதிய சட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது மீன்பிடித்தல் உரிமம் வழங்கும்  அதிகாரமும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு சென்றுவிடும்.புதிய சட்டத்தில் உள்ள அம்சங்கள் பாரம்பரியமாக செய்துவருகின்ற மீன்பிடி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பான கருத்துகள் கேட்கும் வகையில் மாநிலங்களுக்கு சட்ட வடிவு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தெரிவிக்கின்ற கருத்துகள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories: