×

ஒவ்வொருவரும் இஷ்டம்போல் முன்னுக்குப்பின் கருத்து கூறும் நிலை உள்ளது அமைச்சர்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்?: அதிமுக கட்சிக்கு பாதிப்பு என தொண்டர்கள் கவலை

சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டத்துக்கு கருத்து கூறி வருவதால், இவர்கள் அனைவரும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற நடவடிக்கை  அதிமுக கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் ஒருவரும் தனிப்பட்ட முறையில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எந்த பேட்டியும் அளிப்பது இல்லை. அரசின் திட்டங்கள் மற்றும் அதிமுகவின் செயல்பாடுகள் என அனைத்து  பிரச்னைக்கும் ஜெயலலிதா மட்டுமே கருத்து தெரிவிப்பார். இதையும் மீறி அமைச்சர்கள் பேட்டி அளித்தாலோ அல்லது கருத்து தெரிவித்தாலோ உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டு  விடுவார்கள். இதுபோன்ற நடவடிக்கையால் தற்போதுள்ள அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தங்கள் பதவியை இழந்த பரிதாப சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கிறார். துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இவர்களுக்கு கீழ் 29 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்த அமைச்சர்கள் தங்கள் துறை சார்பாக தினசரி  கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழக மற்றும் இந்திய அரசியல் நிலவரம் குறித்தும் அனைத்து அமைச்சர்களும் பேட்டி அளிக்கிறார்கள். இப்படி, இவர்கள் பேட்டி அளிக்கும்போது தமிழக அரசின் (அதிமுக அரசு)  கொள்கை முடிவுக்கும் அமைச்சர்களின் கருத்துக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. அதேபோன்று, ஒரே பிரச்னையில் ஒரு அமைச்சர் தெரிவித்துக்கும் கருத்தும் மற்றொரு அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் அதிக  வித்தியாசம் ஏற்படும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒரு அமைச்சரையும் கருத்து தெரிவிக்க  அனுமதிக்க மாட்டார். இதனால், தொலைக்காட்சி மைக்கை கண்டாலே அமைச்சர்கள் ஓடி விடுவார்கள். காரணம், அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.ஆனால், இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. சில அமைச்சர்கள் தினசரி பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு செய்தி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இதற்காக அவர்கள் காலையிலேயே வீட்டுக்கு  பத்திரிகையாளர்களை வர சொல்லி விடுகிறார்கள். இப்படி பேட்டி அளிக்கும்போது, சரியான தகவல்களை தெரிவிக்காமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தான் பங்கேற்கும்  கூட்டங்களில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி வருகிறார். சமீபத்தில் கூட வேலையே செய்யாமல் சும்மா உட்கார வேண்டும் என்றால் சத்துணவு மையத்திற்கு வேலைக்கு போங்கள் என்று அரசு அதிகாரிகளை எச்சரிக்கும்  வகையில் பேசியுள்ளார். அப்படியென்றால், சத்துணவு துறையில் பணியாற்றுபவர்கள் வேலையே செய்வதில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜு பற்றி கேட்கவே வேண்டாம். அறிவியல் விஞ்ஞானி என்ற  பட்டமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம், தெர்மாகோல் சம்பவத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை.

 அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வி துறை சார்பாக தினசரி ஒரு கருத்தை தெரிவித்து வருகிறார். ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில் கூட, அமைச்சர் செங்கோட்டையன்,  தமிழகத்தில் தற்போதுள்ள அனைத்து மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றார். அதே நேரம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கும்போது, மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும்  திட்டம் இல்லை என்றார். இப்படி ஒரே செய்தியில், இரண்டு அமைச்சர்களும் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தமிழக முதல்வர் ஆவின் பால் விலையை உயர்த்தி அறிவித்தார். அப்போது, பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக அறிவித்தார். முதல்வர் கருத்து  தெரிவிக்கும்போது, பால்வளத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, பால் கூட்டுறவு சங்கங்களில் சில நஷ்டத்தில் இயங்குவதாகவும், சில லாபத்தில் இயங்குவதாகவும் கூறி, இதைத்தான் முதல்வர் குறிப்பிட்டு கூறினார் என்று சமாளித்தார்.

 சில நாட்களுக்கு முன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார். அவர் பேட்டி அளிக்கும்போது, கேபிள் டி.வி. கட்டண குறைப்பு குறித்து துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் என்னிடம்  விவாதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது பற்றி ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், எனக்கு அது உறுதியாக தெரியாது  என்றார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த தகவல், அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் குழப்புவதாக உள்ளது. இதில் இருந்து தமிழக அமைச்சர்கள் ஒரு தலைமையின் கீழ் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.  இப்படி, தினசரி அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் அதிமுகவில் தொடர்ந்து குழப்பமான நிலையே உள்ளது.  இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அமைச்சர்கள் தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்து, அரசின் கொள்கை முடிவுகளே ஒரே குரலில்  தெரிவித்தால்தான் மக்கள் வரவேற்பை பெற முடியும்.மைக் முன்னால் பேச வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. அதனால் ஜெயலலிதா கடைபிடித்த நடவடிக்கையை தற்போதுள்ள முதல்வரும் பின்பற்ற வேண்டும் அல்லது அடிக்கடி அமைச்சர்களை அழைத்து அதிமுக அரசின் கொள்கைகளை விரிவாக அமைச்சர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.  அப்போதுதான் அதிமுக கட்சியும் வளர்ச்சி பெறும், தொண்டர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்றனர்.

புதிய அமைச்சர் நியமனம் எப்போது?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 32 பேரும், கூடுதலாக செங்கோட்டையன் என 33 பேர் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையில் சேர அதிமுக எம்எல்ஏக்கள்  சிலர் கடுமையான முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், புதிதாக அமைச்சர்களை சேர்த்தால், பலரும் அமைச்சர் பதவி கேட்பார்கள் என்று புதிதாக யாருக்கும் பதவி வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், எடப்பாடி அமைச்சரவையில்  இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் தற்போது அமைச்சராக இல்லை. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பாலகிருஷ்ண ரெட்டியும், சக அமைச்சருடன் கருத்து வேறு ஏற்பட்டதால் மணிகண்டனும் அமைச்சர் பதவியை  இழந்தனர்.

இந்த இரண்டு அமைச்சர்களுக்கு பதில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை முதல்வர் எடப்பாடியையும் சேர்த்து 31 பேர் உள்ளனர். இதனால், கூடுதலாக 2  அல்லது 3 பேருக்கு புதிய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்படி, 2 அல்லது 3 பேருக்கு மட்டும் வழங்கினால் அதிருப்தி எம்எல்ஏக்களின் எதிர்ப்பை சந்தித்து ஆட்சியை  இழக்க நேரிடும் என்பதால் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாமல் உள்ளதாக அதிமுக மூத்த அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி மைக்கை கண்டாலே அமைச்சர்கள் ஓடி விடுவார்கள். காரணம், அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

Tags : Everyone ,ministers , control?
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...