முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும்போது பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் கிடையாது: எடப்பாடி முடிவால் ஓபிஎஸ் அதிர்ச்சி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் இறுதியில் வெளிநாடு செல்கிறார். அப்போது பொறுப்பு முதல்வர் யாருக்கும் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடியின் இந்த முடிவால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி  அடைந்துள்ளார்.

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 28ம் தேதி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்கிறார். அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறார்கள்.முதல்வர் வெளிநாடு செல்லும்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு சில வெளிநாட்டு நிறுவன அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொழில் நிறுவனங்களை நேரில் சந்தித்தும் பார்வையிடுகிறார். முதல்வர்  வெளிநாட்டில் சுமார் இரண்டு வார காலம் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. முதல்வர் வெளிநாடு செல்ல இருப்பதையொட்டி, இதற்கான முன்ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முன்னதாக, அதிகாரிகள் குழு  ஒன்றும் வெளிநாடு செல்கிறது. வெளிநாடு பயண விவரம் குறித்து இன்று அல்லது நாளை மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

 வழக்கமாக, மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும்போது பொறுப்பு முதல்வர் ஒருவரை அறிவித்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம்  பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படலாம் என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால், தற்போது பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வெளிநாடு சென்றாலும், அங்கிருந்தபடியே தமிழக நிலவரங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார்.  காரணம், யாருக்காவது பொறுப்பு முதல்வர் பதவி வழங்கினால், அதனால் ஏதாவது பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் எடப்பாடி மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரின் இந்த முடிவால் துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Related Stories: