×

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தான்  ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி 95வது வட்ட செயலாளர் மா.அகிலன் இல்ல மணவிழாவை திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது அவர்  பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லை என்றாலும்; திமுக என்பது மக்களுக்குப் பணியாற்றும் சூழ்நிலையில் இருந்து என்றைக்கும் பின்வாங்கியது இல்லை. தொடர்ந்து நாம் அதை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்காக  ஆற்றுகிற பணி மட்டுமல்ல; திமுக பொறுத்தவரையில், இயக்கத்தைத் தாண்டி, மக்களையும் தாண்டி இந்த நாட்டையும் பாதுகாக்கின்ற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகளே  உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்கள்.

அப்போது தமிழ்நாட்டில் திமுக  ஆட்சி. அப்படிப்பட்ட நேரத்தில், தலைவர் கலைஞர், `இந்தியாவே இன்றைக்கு நெருக்கடி நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.  இந்த நேரத்தில், நாம் திமுக சார்பில் குரல் எழுப்பியாக வேண்டும்’’ எனச் செயல்பட்டார். கடற்கரையில் திரண்டிருந்த கூட்டத்தில் பேசினார்; லட்சக்கணக்கான மக்களை எழுந்து நிற்க வைத்தார். அனைவரும் எழுந்து நின்றார்கள். தலைவர்  கலைஞர் தீர்மானத்தினை எடுத்துப் படித்தார். அப்படி படித்தபோது அவர் சொன்னார், `` இந்திரா காந்தி, உடனடியாக நெருக்கடி நிலையை நீங்கள் திரும்பப்பெற வேண்டும். சிறையில் இருக்கும் தலைவர்களை எல்லாம் நீங்கள் உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும். இதுதான் திமுக வேண்டுகோள்”, என்று அந்தத் தீர்மானத்தினைப் படிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் அத்தனை பேரும் அதனை வழிமொழிந்து, வரவேற்றார்கள். இது வரலாறு. தீர்மானம் போட்ட அடுத்த விநாடியே   திமுக ஆட்சியை கலைத்தார்கள். அப்படி ஆட்சியைக் கலைத்ததும், தயாநிதி மாறனின்  தந்தை முரசொலி மாறன், கலாநிதியின் தந்தை வீராசாமி, பேசிக்கொண்டிருக்கும் நான் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டோம்.

அதன்பின்னர், இந்திராகாந்தி திமுகவோடு கூட்டணி வைத்து கொண்டு, எங்கே தலைவர் கலைஞர்  தீர்மானம் போட்டாரோ, அதே கடற்கரை மேடைக்கு வந்து பேசினார். ``நான் நெருக்கடி நிலை கொண்டு வந்ததற்காக வருத்தப்படுகிறேன்;  வெட்கப்படுகிறேன்; மன்னிப்பு கேட்கின்றேன்” என்று அவரைச் சொல்ல வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். நான் எதற்காக இதனைச் சொல்கின்றேன் என்றால், ஆட்சியில் இருந்த போதும், ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் நாம் அந்த  தீர்மானத்தை போட்டோம். இப்போது நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் எனக்கு இருக்கக்கூடிய மனச்சங்கடமெல்லாம் என்னவென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் செய்திருக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அதனை எதிர்த்து தீர்மானம் போட்டிருக்க வேண்டும். நாம் கண்டிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், நாம் நேற்று முன்தினம்  டெல்லியில் என்ன போராட்டம் நடத்தினோம்?. அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டாம் என்றா போராட்டம் நடத்தினோம்? கிடையாது.ஆனால், அதனை ரத்து செய்வதற்காக நீங்கள் அணுகிய முறை சரியில்லை. அதை அமல்படுத்திய விதம் சரியில்லை. காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும். அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து  ஒப்புதல் கேட்டிருக்க வேண்டும். அங்கு மக்கள் ஆட்சி அமைய வேண்டும். அப்படி அமைந்ததற்குப் பிறகு, அந்த ஆட்சி சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் டெல்லியில், மக்களவையில்  மாநிலங்களவையில் வைத்து விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்து கேபினட்டில் அமர்ந்து நீங்கள் பேசி முடிவு செய்து, அதன்பிறகு முறையாக அதை அறிவிக்க வேண்டும்.

இந்த முறைதான் நடைபெற்று இருக்கின்றதா? இது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. சர்வாதிகாரத்தோடு நடந்திருக்கின்றது. எனவே, அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டி, ஏற்கனவே தீர்மானம் போட்டோம். இன்னும் கைது செய்து வீட்டுச்  சிறையில் இருக்கும் தலைவர்கள், வீட்டுச் சிறையில் தான் இருக்கின்றார்களா? என்ன ஆனார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை. இதைத்தான் நாங்கள் வலியுறுத்தி, விடுதலை செய்யுங்கள்; எங்கு இருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள்;  மக்கள் காஷ்மீரில் சுதந்திரமாக நடமாட அனுமதியுங்கள் என்ற அடிப்படையில் தான் டெல்லி மாநகரத்தில் திமுக  முன்னின்று நடத்திய கண்டனப் போராட்டம் நடைபெற்றது.திமுகவை பொறுத்த வரையி 8 வருடமாக ஆட்சியில் இல்லை. ஆனால், 8 வருடமாக அதிமுக  ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி நடக்கின்றதா, நடக்கவில்லையா என்பது வேறு, ஆனால் ஆட்சியை நடத்துவதே இன்றைக்கு  எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தான். இந்த லட்சணத்தில் முதலமைச்சர் விரைவில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். மோடி தான் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது இவர் துவங்கியிருக்கிறார். அவர்  செல்லட்டும்; நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனால் நாட்டிற்கு ஏதாவது நன்மை இருக்குமா? முதலீடு திரட்டப் போவதாக சொல்கின்றார்.

நாட்டிற்கு முதலீடா, எடப்பாடிக்கு முதலீடா என்பது தான் தெரியவில்லை. ஏற்கனவே  ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு வருகின்றது என்று சொன்னார். ஏதாவது வந்ததா? அதன்பிறகு இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு ₹3 லட்சம் கோடிக்கு முதலீட்டை  கொண்டு வரப்போவதாக இப்போது இருக்கக்கூடிய முதல்வர் அறிவித்தார். வந்ததா என்றால் கிடையாது.நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுக்க வெளிநாடு பயணமா? இப்பொழுது முதலீட்டைத் திரட்ட போகின்றேன் என்று சொல்கின்றார். அதனால் தான் சொல்கின்றேன்; முதலீடு மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், நாட்டிற்கு முதலீடு  வந்தால் பரவாயில்லை. ஆனால், முதலமைச்சரோடு அமைச்சர்கள் புடைசூழ படையெடுத்துப் போகின்றார்கள் என்ன நடக்கப் போகின்றதோ? இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடிக் கொடுக்கப் போகின்றார்களோ என்ற  நிலையில் தான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றோம்.இவ்வாறு அவர் பேசினார். இன்னும் கைது செய்து வீட்டுச் சிறையில் இருக்கும் தலைவர்கள், வீட்டுச் சிறையில் தான் இருக்கின்றார்களா? என்ன ஆனார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை.


Tags : Opposition, Tamil Nadu, DMK , regime, MK Stalin
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்