பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்த நடவடிக்கையை எடுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு அதை சீர்திருத்தவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :இந்திய பொருளாதாரமும், சந்தைகளும் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றை சமாளிப்பதற்கான சில நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மந்த நிலையை சமாளிக்க அவை ஓரளவு  உதவும் என்ற போதிலும், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார சிக்கலின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது, இவை யானை பசிக்கு சோளப்பொறியாகும்.மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, அவற்றின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்கும். ஆனால், மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்த அறிவிப்புகள்  போதுமானவை அல்ல. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதால் சிறு தொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு  ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் இதிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும்.

ஆனால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.20% ஆக குறைந்து இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியும், ஏற்றுமதியும் கடந்த  ஆண்டுகளில் இருந்ததை விட நடப்பாண்டில் குறைந்து விட்டதையே அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இது வளர்ச்சிக்கு வழி வகுக்காது. இந்தியப் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின்  முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுனர்களின் கருத்தும் இதையொட்டியே உள்ளது. எனவே, இந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: