முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள்  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி (66), சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் தகனம் நடக்கிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி(66), மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். இந்நிலையில் அவர் நேற்று மதியம் 12.07 மணியளவில் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பாஜ தலைவர்கள், அமைச்சர்கள்,  மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர். பின்னர் அருண் ஜெட்லியின் உடல் பிரேத  பரிசோதனைக்கு பின்னர், எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று மாலை டெல்லி  கைலாஷ் காலனியில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்  அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி ஐ.டி.ஓ பகுதியில் இருக்கும் பாஜ தலைமை  அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. அருண் ஜெட்லிக்கு அஞ்சலி  செலுத்துவதற்காக ஏராளமான பாஜ தொண்டர்கள், மூத்த தலைவர்கள், மத்திய  அமைச்சர்கள் என அனைவரும் வந்த வண்ணம் உள்ளனர். ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா  நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த அருண் ஜெட்லிக்கு, சங்கீதா என்ற மனைவியும், சோனாலி என்ற மகளும், ரோகன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் எமிரேட்ஸ் சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி போனில் பேசி இரங்கல் தெரிவித்தார். பயணத்தை ரத்து செய்துவிட்டு, அஞ்சலி செலுத்த நேரில் வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், வெளிநாட்டு பயண திட்டங்களை ரத்து செய்ய வேண்டாம் என மோடியிடம், அருண் ஜெட்லி குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.ஆரம்ப வாழ்க்கை: டெல்லியில் கடந்த 1952ம் ஆண்டு அருண் ஜெட்லி பிறந்தார். இவர் பஞ்சாபி இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மகாராஜ் ஜெட்லி வக்கீலாக பணியாற்றினார். டெல்லி புனித சேவியர் பள்ளியில் படித்த அருண் ஜெட்லி, டெல்லி ராம் கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பை முடித்தார். அதன்பின் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சட்டப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார். கடந்த 1975ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாணவர் அமைப்பினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு 19 மாதம் சிறை சென்றார்.

அரசியல் வாழ்க்கை: பா.ஜ கட்சியில் கடந்த 1991ம் ஆண்டிலிருந்து ஜெட்லி உறுப்பினராக இருந்தார். கடந்த 1999ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ செய்தி தொடர்பாளராக ஜெட்லி இருந்தார். 1999ல் தே.ஜ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டில் வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆனபோது, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வர்த்தக அமைச்சர், நிதியமைச்சர்என பல பொறுப்புகளை வகித்தார். பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கும் சாணக்கியராக இவர் கருதப்பட்டார். ஜெட்லியை விலைமதிப்பற்ற வைரம் என மோடி ஒரு முறை புகழ்ந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது ஏற்பட்ட பிரச்னைகளை அருண்ஜெட்லி வெற்றிகரமாக சமாளித்தார். வங்கிக் கணக்குடன், பான் எண், ஆதார் எண் இணைத்தது போன்ற அசாத்திய முடிவுகளுக்கு வழிவகுத்தவர் அருண் ஜெட்லி. மேலும் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், லோக்பால் உட்பட பல முக்கிய சட்டங்களை  நிறைவேற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் அருண் ஜெட்லி.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவர சர்ச்சையில், முதல்வராக இருந்த மோடி சிக்கியபோதும், அப்பிரச்னையிலிருந்து மோடி வெளிவர அருண்ஜெட்லி நல்ல ஆலோசகராக இருந்தார். இருவருக்கும் இடையே கடந்த 90ம் ஆண்டுகளில் இருந்த நெருங்கிய நட்பு நீடித்தது. 90ம் ஆண்டுகளில் பா.ஜ பொதுச் செயலாளராக மோடி நியமிக்கப்பட்டபோது, அவர் ஜெட்லியின் இல்லத்தில் உள்ள கட்டிடத்தில் தங்கியிருந்தார். பல வழக்குகளில் சிக்கிய அமித்ஷா வெளிவருவதிலும் அருண்ஜெட்லி முக்கிய ஆலோசகராக இருந்தார். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி அலுவலகத்துக்கு அமித்ஷா அடிக்கடி வந்து சென்றார்.

தலைவர்கள் இரங்கல்:

பிரதமர் மோடி: அருண் ஜெட்லி மிகவும் மதிப்புமிக்க நண்பர். இந்தியாவின் அரசியல் சாசனம், வரலாறு, பொது கொள்கை, அரசு மற்றும் நிர்வாக விஷயங்களில் ஆழமான அறிவும், புரிதலும் கொண்டவர். அவரது மறைவு எனக்கு மிகப் பெரிய இழப்பு.   துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: எனது நீண்டகால நண்பராக இருந்த அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. தனிப்பட்ட முறையிலும் எனக்கு பெரிய இழப்பு. எனது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அமித்ஷா: ஜெட்லியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. கட்சியின் மூத்த தலைவரை இழந்துவிட்டேன். நீண்ட காலமாக அவரது ஆதரவும், வழிகாட்டுதலையும் நான் பெற்றுள்ளேன். ராஜ்தாந் சிங்: நாட்டின் பொருளாதாரத்தை இருளில் மீட்டு சரியான பாதைக்கு கொண்டு வந்ததற்காக, அருண் ஜெட்லி என்றும் நினைவு கூறப்படுவார். அவரது மறைவு பாஜ.வுக்கு இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

ஸ்மிருதி இராணி: சிறந்த பேச்சாளராகவும், சட்ட நிபுணராகவும் நாட்டுக்கும், கட்சிக்கும் அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் பணியாற்றியவர். அவருக்கு எனது புகழஞ்சலி. அவரை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கல்கள். அரவிந்த் கெஜ்ரிவால்: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மரணம் நாட்டுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.சோனியா காந்தி: நாடாளுமன்றவாதியாக, அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றியவர் அருண் ஜெட்லி. அவரது பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படும். ராகுல்  காந்தி: அருண் ஜெட்லியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது  குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். அவரது ஆன்மா  சாந்தியடையட்டும்.காங்கிரஸ்: அருண்ஜெட்லியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்கள். மம்தா பானர்ஜி: அருண்ஜெட்லி அனைத்து கட்சியினராலும் பாராட்டப்பட்டவர். இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

வர்த்தகத்துறையில் முரசொலி மாறனை பின்பற்றியவர் அருண்ஜெட்லி மறைவுக்கு திமுக சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது;பா.ஜ கட்சியின் மிகச் சிறந்த தலைவர்களில் அருண் ஜெட்லியும் ஒருவர். கல்லூரியில் படித்த காலத்திலேயே, அவர் மாணவர் தலைவராக அவசரநிலைக்கு எதிராக போராடியவர். இளம்வயதில் இருந்தே அவர் அரசியலில் பங்கெடுத்துள்ளார். கட்சியில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மத்திய அரசிலும் சட்டம் மற்றும் நீதித்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாதுகாப்புத்துறை, கம்பெனிகள் நிர்வாகம் மற்றும் நிதியமைச்சராக பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்துள்ளார். திமுக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சருமான முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு, அத்துறைக்கு பொறுப்பேற்றவர் அருண் ஜெட்லி. கடந்த 2001ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் வளரும் நாடுகளின் உரிமைகளை பாதுகாக்க முரசொலி மாறன் வெளிப்படுத்திய தொலை நோக்கை பின்பற்றி, கடந்த 2003ம் ஆண்டு மெக்சிகோ கான்கன் நகரில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை அருண்ஜெட்லி தெரிவித்தார். சிறந்த சட்ட நிபுணராகவும், நாடாளுமன்ற வாதியாகவும் திகழ்ந்த அருண்ஜெட்லியின் மறைவுக்கு எங்களது இரங்கலை தெரிவிக்கிறோம். நாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் நீண்டகால அர்ப்பணிப்புக்கு எங்களது மரியாதையை செலுத்துகிறோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். திமுக சார்பில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் டெல்லியில் இன்று அருண் ஜெட்லியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவர்.

ஜெட்லி வீட்டில் தலைவர்கள் மலரஞ்சலி

மறைந்த  அருண் ஜெட்லியின் உடல், தெற்கு டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது  வீட்டுக்கு நேற்று மாலை எடுத்துச் செல்லப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், மத்திய அமைச்சர்கள், பா.ஜ தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்கள் ஜெட்லி இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி  செலுத்தினர்.

Related Stories: