காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை: டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அனுமதி கிடைக்காததால் டெல்லி திரும்பினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி எதிர்கட்சித் பிரதிநிதிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்கவில்லை. ராகுல் தலைமையில் டி.ராஜா, யெச்சூரி, திருச்சி சிவா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர்.

காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை என்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேட்டியளித்துள்ளார். காஷ்மீர் நிலவரத்தை அறிய சென்றபோது காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எங்களுடன் வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நிலைமை சாதாரணமாக இல்லை என்பதை தெளிவாக்குகிறது. சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் அங்குள்ள நிலைமையை அறிய சென்றேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி காஷ்மீருக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்த வந்ததாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது என்று திமுகவை சேர்ந்த திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார். ஆளுநர் அழைப்பின் பேரில் தான் ராகுல்காந்தி காஷ்மீர் சென்றார். எங்கள் நோக்கத்தை தவறாக சித்தரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீரில் ஆய்வு செய்ய சென்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டியளித்துள்ளார். காஷ்மீரில் அமைதியை குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றதாக கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்களை மற்ற மாநிலங்களில் உள்ள உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Rahul Gandhi, Delhi, Kashmir
× RELATED காந்தி பிறந்த மண்ணில் வன்முறைக்கு...