புதிய கல்வி கொள்கை மூலம் உரிமை பறிபோகிறது... நாடாளுமன்றம் 90 சதவீதம் காவிமயமாகி உள்ளது: புதுவை முதல்வர் பேச்சு

திருச்சி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவறிக்கையை திரும்ப பெறக்கோரி கல்வி உரிமை மாநாடு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதிய கல்வி கொள்கையின் மூலம் நமது உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. தமிழ்மொழியை குழி தோண்டி புதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றம் தற்போது நூற்றுக்கு 90 சதவீதம் காவிமயமாகி உள்ளது. நாம் விழிப்புடன் இல்லையென்றால் தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழ்நாட்டையும் விழுங்கிவிடுவார்கள். நாம் இந்தி திணிப்பதை தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி படிப்பதை எதிர்க்கவில்லை.

நீட், நெஸ்ட் போன்ற தேர்வுகள் மூலம் தென் மாநில மாணவர்களின் கல்வியை மத்திய அரசு வீணாக்குகிறது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கேட்க அனைத்து மாநில முதலமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுச்சேரியில் நாங்கள் பாஜகவை கட்டுக்குள் வைத்துள்ளோம். புதிய கல்வி கொள்கையை புதுச்சேரி அரசு முழுமையாக எதிர்க்கும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், திமுக அமைப்பு செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன், திக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், விசி பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார், தமுஎச மாநில தலைவர் வெங்கடேசன், கவிஞர் நந்தலாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Narayanasamy, Chief Minister, Pondy
× RELATED ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை...