×

நெருங்குகிறது தீபாவளி பண்டிகை... சிவகாசியில் ‘கிப்ட் பாக்ஸ்’ தயார் செய்யும் பணி தீவிரம்

சிவகாசி: தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் சிவகாசியில் ‘கிப்ட் பாக்ஸ்’ தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணி, வெளிமாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. மக்கள் விரும்பும் அனைத்து பட்டாசுகளும் அடங்கிய ‘கிப்ட் பாக்ஸ்களுக்கு’ ஆண்டுதோறும் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

சில நாட்களில் ஆயுதபூஜை, துர்காபூஜை, தசரா பூஜை என நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் ஆயுதபூஜை முதல் பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கும். வழக்கத்தை விட இந்தாண்டு கிப்ட் பாக்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 33 வகையான கிப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கிப்ட் பாக்ஸ்களில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு , பாம்பு மாத்திரை, தரை சக்கரம், புஸ்வானம், கார்ட்டூன் வெடிகள் என 20க்கு மேற்பட்ட பட்டாசுகளும், பெண்களை கவரும் விதமாக தரை சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள், இளைஞர்களை கவரும் விதமாக புல்லட் ஃபாம், ஆட்டோ ஃபாம், அனுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட் போன்ற வெடிகள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கிப்ட் பாக்ஸ்கள் ரூ.350 முதல் ரூ.3ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சில பட்டாசு நிறுவனங்கள் மக்களை கவர புதிய ரக பட்டாசுகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பி உள்ளன. இதுகுறித்து பட்டாசு வியாபாரி முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘‘சிவகாசியில் முன்னணி கம்பெனிகளின் கிப்ட் பாக்ஸ்கள் (17 முதல் 21 ரகங்கள்) ரூ.350 முதல் ரூ.450 வரையும், 23 முதல் 33 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.600 முதல் ரூ.1000 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.1000 முதல் ரூ.1400 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.1500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கம்பெனிகளுக்கு ஏற்ப மாறுதல் இருக்கும்’’என்றார்.

Tags : Diwali Festival, Sivakasi
× RELATED முதுமலை முகாமில் யானைகள் பூஜையுடன் விநாயகர் சதுர்த்தி விழா