×

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர்-6 செ.மீ, சத்தியமங்கலம்-5 செ.மீ, ஏற்காட்டில்- 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சின்னக்கல்லார், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டம் கொடை வாசல், மன்னார்குடி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், நாகை தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rain, Tamil Nadu, Chennai Weather Center
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்