×

திருப்பதி கோயிலுக்கு சொந்தமான ரூ.5.15 கோடி மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் வங்கிகளில் முதலீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகளாகவும், சில்லரையாகவும் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளை தினந்தோறும் எண்ணப்பட்டு வங்கியில் தேவஸ்தான கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லரை நாணயங்களை வங்கிகள் வாங்குவதற்கு முன்வராததால் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் சில்லரை பரக்காமணியில் ரூ.20.50 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மலைபோல் சேர்ந்தது. இதனை மாற்றுவதற்காக தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்தவித பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் சில்லரை நாணயங்களை எந்தெந்த வங்கிகள் பெற்றுக்கொள்கிறதோ அந்த மொத்த தொகையையும் அந்த வங்கியிலேயே முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் சில்லரை நாணயங்களை பெறுவதற்கு சற்று தயங்கிய நிலையில் ரிசர்வ் வங்கி கொடுத்த உறுதிமொழியை அடுத்து சில்லரை நாணயங்களை வங்கிகள் வாங்குவதற்கு முன் வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் ரூ.5.15 கோடி சில்லரை நாணயங்களை பல்வேறு வங்கிகள் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் தேவஸ்தானத்தின் சார்பில் அந்ந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள சில்லரைகளும் வங்கியில் முதலீடு செய்யப்பட உள்ளது. தற்போது சில்லரை நாணயங்கள் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதால் அதன் மூலமாக வட்டி கிடைக்க உள்ளது. இதேபோன்று புழக்கத்தில் இல்லாத சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதற்கும் தேவஸ்தான அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் அனைத்து நாணயங்களையும் மாற்றி தேவஸ்தான வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Investment in banks, Tirupati
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...