×

தமிழக அரசு பஸ்சில் கன்னட பேப்பர் ரோல்... சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் நேற்று வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவரிடம் வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு ரூ.82 என்ற கட்டணத்தை மெஷின் மூலம் பிரிண்ட் செய்து டிக்கெட்டை வழங்கினார். அப்போது, அந்த டிக்கெட் ரோலின் இருபுறமும் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தை குறிக்கும் வகையில், கே.ஆர்.எஸ்.டி.சி’ என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக முத்திரையும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழக அரசு பஸ்சில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பெயர் அச்சிடப்பட்டதை கண்டு பயணி அதிர்ச்சியடைந்தார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள  தமிழர்களை கன்னடர்கள் அடிமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. சில நாட்களுக்கு  முன்பு கூட கர்நாடகாவில் தமிழ் பாடல் பாடிய இசை குழுவினரை கன்னட அமைப்பினர் சரமாரி தாக்கியது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மத்திய அரசு இந்தி திணிப்பை தற்போது  செயல்படுத்தி வருவது போல் தமிழகத்தில் கன்னட மொழியையும் திணித்து வருகிறதா?  என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கர்நாடக டிக்கட் ரோல் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவும், அதை பயன்படுத்த உத்தரவு தந்தது யார்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம், கலெக்டர் விசாரணை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் பணிமனை மேலாளர் குமரனிடம் கேட்டபோது, ‘பேப்பர் ரோல் கண்டக்டர்கள் யாராவது வாங்கி பயன்படுத்தினார்களா என விசாரணை செய்யப்படும். அவ்வாறு பயன்படுத்தியவர் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். என்றார்.

அரசு பஸ்களில் கண்டக்டர்கள் எலக்ட்ரானிக் மெஷின்களில் டிக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மெஷின்களுக்கு வழங்கும் பேப்பர் ரோல், கோட்ட மேலாளர் நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்படுவதில்லையாம். இதனால் கண்டக்டர்களே தங்களின் சொந்த செலவில் ஒரு பேப்பர் ரோல் ₹20க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேப்பர் ரோலுக்காக கொடுக்கும் அரசு வழங்கும் பணம் எங்கே போகிறது என கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.

Tags : Government Bus, Kannada Paper Roll
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...