6 தீவிரவாதிகள் ஊடுருவல்... கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை

கோவை: கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற மத்திய உள்துறையின் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கோவைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உளவுத்துறை அறிக்கையில் இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற தீவிரவாதியும் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ.தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற வெளியான தகவலையடுத்து கோவை முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதற்கு கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கோவையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்படி உள்ளூர் போலீசார், அதிவிரைவுப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் நுழைவு பகுதிகளான 12 செக்போஸ்ட்கள் மற்றும் கோவை மாவட்ட நுழைவு பகுதிகளில் 27 செக்போஸ்ட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.இதற்கிடையே கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையில் வேளாங்கண்ணி பேராலயம், டிஎஸ்எஸ் வெல்லிங்டன் உதகை, கோவை சூலூர் விமான படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் விழா ஆகியவற்றை தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வேளாங்கண்ணி முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், நாகூரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்திய போது, சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் செய்யது அபுதாகீர் (31), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவர் சாதாரண நபர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செய்யது அபுதாகீரை அனுப்பி வைத்தனர்.தீவிரவாதிகள் ஊடுருவல் தகவலையடுத்து, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருவர் கைது

இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் மற்றும் அவருக்கு உதவியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: