பேராவூரணி பகுதியில் காலை, மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

பேராவூரணி : பேராவூரணி பகுதியில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் பஸ் படிக்கட்டுகளில் நின்று மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பேராவூரணியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 26 கி.மீ தொலைவில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கும் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளிகள், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் தனியார் மற்றும் நகர பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்தில் இட நெருக்கடி காரணமாக ஆபத்தான முறையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர். படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதை பார்க்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் அச்சமடைகின்றனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி கூறியதாவது: பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இடநெருக்கடி காரணமாக பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.

மேலும் பேருந்தில் இடநெருக்கடி காரணமாக மாணவிகள் பல்வேறு பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். பல இடங்களில் நெருக்கடி காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பேராவூரணி மட்டுமில்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: