மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். இவருக்கு வயது 66, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் இன்று பிரிந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேபோல, துணை குடியரசு தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், நாட்டின் மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்:

மறைந்த அருண் ஜேட்லியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா :

அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அருண் ஜேட்லியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடன் அன்பாக பழகக்கூடியவர் அருண் ஜேட்லி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி என கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர் என புகழாரம் சூட்டினார். ஜேட்லியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, கட்சி தொண்டருக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஜேட்லியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

நாடாளுமன்றத்தில் திறம்பட செயல்படக்கூடிய ஜேட்லியின் மறைவு குடும்பத்தினருக்கும், பாஜகவினருக்கும் பேரிழப்பு என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லியின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

அருண் ஜேட்லி செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான ஜேட்லி மறைவெய்தியது பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் - சோனியா காந்தி:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அருண் ஜேட்லி மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், பொது வாழ்க்கையில் அருண் ஜேட்லியின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவில் வைக்கப்படும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். மிகச்சிறந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உருவாக்கி மக்களை முன்னேற்ற பாதைக்கு அழத்து சென்றவர் அருண் ஜேட்லி. அவரது மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு, பாஜகவினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ:

அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்திலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தவர் அருண் ஜெட்லீ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பிரச்சனைகளை ஆராய்ந்து விரைவாக முடிவெடுக்க கூடியவர் என்றும் எனது நல்ல நண்பர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: