ராஜாக்கமங்கலம் அருகே பணி எதுவும் நடக்காமல் ₹8 லட்சத்தில் குளத்தை சீரமைத்ததாக கல்வெட்டு

நாகர்கோவில் :  ராஜாக்கமங்கலம் அருகே புதர் மண்டி கிடக்கும் குளம் A8.47 லட்சத்தில் சீரமைக்கப்பட்டதாக வைக்கப்பட்ட கல்வெட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாக கூறிய பொதுமக்கள் கலெக்டர், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சி, வெள்ளாரன்விளையில் உள்ள பெருங்குளத்தை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தும் வகையில் குளத்தில் இருந்து மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் அதன் பின்னர், ஆக்ரமிப்பு களை அகற்றி குளத்தின் கரையை பலப்படுத்தவில்லை. மேலும் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய்களும் புதர் மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென குளத்தின் கரையில் ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதில், பெருங்குளம் கரை மேம்பாடு செய்யப்பட்டதாகவும், 30.5.2019 முதல் 24.7.2019 வரை தினக்கூலியாக ரூ.200 சம்பளத்தில் பணி நடந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.8 லட்சத்து 47 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எந்த வித பணியும் செய்யாமல் இப்படி மோசடியாக ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளதே என கூறி ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி பெருமளவில் திரண்டனர். இது பற்றி அறிந்ததும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் அங்கு வந்தனர். பணியை செய்யாமல் எப்படி நீங்கள் இப்படி ஒரு கல்வெட்டு வைக்கலாம் என கூறி அதிகாரிகளிடம், பொதுமக்கள் ஆவேசமாக கூறினர். இதையடுத்து கல்வெட்டைஅகற்றினர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், வெள்ளாரன்விளை பெருங்குளத்தை முறையாக தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆக்ரமிப்பில் உள்ளன. பல இடங்களில் புதர்மண்டி கால்வாயை காணவில்லை. எனவே ஆக்ரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  மேலும் சுமார்  ரூ.8 லட்சம் செலவில் பணிகள் நடந்ததாக போலியாக ஒரு கல்வெட்டை வைத்துள்ளனர்.

எனவே இந்த குளத்தை சீரமைத்ததாக கூறி இந்த பணம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்த வேண்டும். கல்வெட்டை வைத்து அதை போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஏமாற்ற திட்டமிட்டு உள்ளனர். எனவே  உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: