திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர்: திருச்சி அருகே ஏ.டி.எம் மையத்தில் பணம் கொள்ளையடித்த நபரை ஆட்டோ ஓட்டுநர் மூலம் காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி தெப்பக்குளம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கே சில நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். அப்போது அவர்கள் கவனத்தை திசை திருப்பிய நபர் ஒருவர் 16 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார். இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரையில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா என்பவரை மதுபோதையில் ஒருவர் சவாரிக்கு தமக்கு லாட்ஜில் அரை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதிக்கு சென்ற ஓட்டுநர் அங்கே வாடகைக்கு அனுகியுள்ளார். அச்சமயம் லாட்ஜில் உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர்.

அதற்கு நபர் நம்மிடம் அடையாள அட்டை இல்லை எனவும், இவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த நபர் கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா மதுபோதையில் இருந்த அந்த நபரை சாதுர்யமாக அழைத்து சென்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை விசாரணையில் அந்த நபர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் திருச்சி ஏ.டி.எம் மையத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட 16 லட்சம் ரூபாய் பணத்தை அவர் தான் கொள்ளையடித்தார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி காவல் துறையிடம் ஸ்டீபன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்த சுமார் 15.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: