×

வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலத்தில் 2 நாட்களில் பெய்த கனமழையால் சுள்ளன் ஆற்றில் புதிய வண்டிப்பாலம் கட்டும் பணி தற்காலிக முடக்கம்

*பொதுமக்கள் பாதிப்பு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் 2 நாளில் பெய்த கனமழையை அடுத்து ஆமைவேகத்தில் சுள்ளன் ஆற்றில் நடைபெற்ற புதிய வண்டிப்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சங்கலம் கிராமத்திற்கும் அதே ஊராட்சியை சேர்ந்த வேதாம்பரை கிராமத்தையும் இணைக்கும் விதமாக சுள்ளன் ஆற்றில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவிலான நடைபாலம் கட்டப்பட்டிருந்தது. இப்பாலம் முற்றிலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.

பழுதடைந்த நிலையில் இருந்த பாலத்தையே அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வேறு வழியின்றி பயன்படுத்தி வந்தனர். மேலும் சுள்ளன் ஆற்றிற்கு தெற்கே மற்றும் வேதாம்பரை பகுதியில் உள்ள எழுநூற்று ஐம்பது ஏக்கர் விளை நிலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி ரெகுநாதபுரம் பாலம் வழியே எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும் வெள்ள காலங்களில் வரும் அதிகப்படியான உபரிநீரில் அடித்து வரப்படும் வெங்காயத்தாமரை உள்ளிடவைகள் பாலத்தின் மிககுறுகிய கன்வாய்களில் அடைத்துகொண்டு நீரின் திசையை திசைமாற்றி விளைநிலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே பழுதடைந்த நடைபாலத்தை இடித்து விட்டு புதிய வண்டிப்பாலம் கட்டித்தர பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இது தினகரனில் படத்துடன் செய்தியாக வந்தது. அதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் அப்போது சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் ஊராக வளர்ச்சித்துறை மூலம் சுள்ளன் ஆற்றில் ஆதிச்சமங்கலம்-வேதாம்பரை ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக சுள்ளன் ஆற்றில் சுமார் நாற்பது மீட்டர் நீளத்துடன் ஏழரை மீட்டர் அகலத்துடனும் ஐந்து கன்வாய்களுடன் நபார்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 48 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வண்டிபாலம் கட்ட நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய வண்டிபாலம் அமைக்கும் பணி துவங்கியது. முன்னதாக பழைய நடைபாலம் இடிக்கப்பட்டு அதே பகுதியில் புதிய வண்டிபாலம் கட்டும் பணி ஆமைவேகத்தில் தொடக்கம் முதலே நடைபெற்று வந்தது. இரண்டு மாத காலமாக பாலத்தின் அடித்தளம் அமைப்பதற்காக அமைக்கப்படும் சுற்றுச்சுவர் வேலை மட்டுமே நடைபெற்றிருந்தது. அதுவும் பூர்த்தி அடையாத நிலையிலேயே இருந்தது.

தற்போது புதிய வண்டிபாலம் கட்டப்படும் சுள்ளன்ஆறு முக்கிய பாசனவடிகால் ஆறாகும். இந்த ஆற்றுக்கு காவிரி மற்றும் வெண்ணாற்றின் கிளை ஆறுகளோடு நேரடியான எவ்வித இணைப்பும் இல்லாத நிலையில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரால் பாலம் கட்டும் பணிக்கு எவ்வித பாதிப்பில்லை.இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகின்றது. ஒரு வாரகாலத்தில் சுமார் 20 செமீ அளவு மழைபெய்துள்ளது. இதையடுத்து மழை நீர் பாலம் கட்டும் இடத்தை கடந்து வேகமாக தற்போது செல்கின்றது.

முன்னதாக பாலம் கட்டும் பணி துவங்கும் முன் பழைய பாலம் இடிக்கப்பட்டதால் மக்களின் பயன்பாட்டிற்கென மாற்றுப்பாதை அமைக்கப்படவில்லை. மேலும் ஆற்றில் எதிர்பாராத விதமாக தண்ணீர் வருவதை தடுக்கும் விதமாக சிறிய அடைப்பு கூட ஏற்படுத்தப்படவில்லை. அதனால் தற்போது பாலம் கட்டும் பணி தற்காலிகமாக தொடர்ந்து நடைபெற வாய்ப்பில்லாமல் உள்ளது. காவிரியின் கிளைஆறுகளில் தண்ணீரை தேக்குவதை போல் சுள்ளன் ஆற்றில் தண்ணீரை தேக்க வாய்ப்பில்லை.

மற்ற ஆறுகளில் பாசனத்திற்கு முறை வைக்கும் போதும், பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தும் போதும் பாலம் கட்டும் பணியை தொடரலாம். ஆனால் சுள்ளன் ஆற்றில் இதுபோன்று வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடதக்கது. இதனால் பாலம் கட்டும் பணி ஆறுமாத காலத்திற்கு பின்னரே மீண்டும் துவங்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதனால் வேதாம்பரை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நியாயவிலைகடை மற்றும் இதர பயன்பாட்டிற்கு நடந்து செல்வதற்கே 2கிமீ தூரம் சுற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் விவசாயிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரும் சுற்றி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணியில் அதிகாரிகள் முழுகவனம் செலுத்தாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Valankaimaan ,heavy rain,Temporary road, damaged
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...