×

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார். இவருக்கு வயது 66 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் இன்று பிரிந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவரது உடல் மிகவும் மோசமானதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி, ஸ்ரீ அருண் ஜேட்லியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். துக்கத்தின் இந்த நேரத்தில் நம் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும் அருண் ஜேட்லியின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்:

அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கதில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒரு நீண்டகால நோயை துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் போராடிய பின்னர் ஸ்ரீ அருண் ஜெட்லி காலமானதால் மிகுந்த வருத்தம். ஒரு சிறந்த வழக்கறிஞர், ஒரு அனுபவமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு புகழ்பெற்ற அமைச்சர், அவர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்கினார். ஸ்ரீ அருண் ஜெட்லி சமமான, ஆர்வம் மற்றும் படித்த புரிதலுடன் மிகவும் கடுமையான பொறுப்பை நிறைவேற்றும் தனித்துவமான திறனைக் கொண்டிருந்தார். அவரது மறைவு பொது வாழ்க்கையிலும், நமது அறிவுசார் சுற்றுச்சூழல் அமைப்பிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜேட்லியின் குடும்பனத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்தார். அருண் ஜேட்லி பேச்சாற்றல் மிக்கவர், அரசியல் வல்லமை படைத்தவர், சட்ட வல்லுனராகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்த தலைவரின் மறைவு கவலை அளிக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக எனக்கு நெருக்கமாக இருந்த மிகச்சிறந்த நண்பர் அருண் ஜெட்லியை இழந்து விட்டேன். ஒவ்வொரு பிரச்னைகளைப் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கும் அறிவு பிரம்மிக்கத்தக்கது. அவர் நன்றாக வாழ்ந்தவர். இனிமையான நினைவுகளை நம்மிடம் விட்டுச் சென்று, நம்மை விட்டு பிரிந்துள்ளார். பாஜகவுக்கும், அருண் ஜெட்லிக்கும் இருக்கும் உறவு பிரிக்க முடியாது. எமர்ஜென்ஸி காலத்தின்போது வீரம் மிக்க மாணவர் தலைவராக ஜனநாயகத்திற்கு அருண் ஜெட்லி குரல் கொடுத்தார். என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும், அருண் ஜெட்லி மறைவு செய்தி கேட்டதும்  வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடிநாளை நாடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Former Union Finance Minister, Arun Jaitley, late, President, Prime Minister, Modi, condolences
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...