×

செங்கம் நகரில் தொடரும் அவலம் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நேர்த்திக்கடன் காளைகள்

*கோசாலையில் பராமரிக்க கோரிக்கை

செங்கம் : செங்கம் நகரில் சுற்றித்திரியும் நேர்த்திக்கடன் காளைகளை மீட்டு கோசாலையில் வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் நகரில் 100க்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ளது. இந்த காளைகள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாத்து, முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் இரவு, பகலாக இந்த காளைகள் சுற்றித் திரிகின்றன.

சாலையில் ஆங்காங்கே அமர்ந்து கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இதில் வாகனங்களில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் காளைகள் உயிருக்கு போராடுவதும் தினசரி நிகழ்வாக உள்ளது. மேலும், சமூக விரோத கும்பல் இதுபோன்ற கேட்பாரற்று சுற்றித்திரியும் காளைகள் மீது தாக்குதல் நடத்தி, ரத்த காயங்களுடன் அவதிப்பட்டு வருவதும் தொடர்கிறது. ஆடு, மாடு திருடும் கும்பல் சுற்றி வரும் வேளையில், கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காளைகளும் திருடப்பட்டு, இறைச்சி கடைகளில் பலியாகும் சூழ்நிலை உள்ளது.

எனவே, பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விட்ட காளைகளை கணக்கெடுக்க வேண்டும். அவற்றை கோசாலையில் வைத்து தீவனம் மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும். நோய்வாய் படாமல் கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Animals,chengam,Accidents
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...