பர்கூர் அருகே 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த காரகுப்பம் சின்னகாரகுப்பம் கிராமத்தில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது ஆய்வு மாணவர்களான பாலாஜி, செல்லையா, இளங்கலை மாணவர் பிரவீன்குமார் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: சின்னகாரகுப்பம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில், கிராமத்தின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள முசாட்டு மலையடிவாரத்தில், மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடுகல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் ஆகும். இதில், வீரன் ஒருவன் வலது கையில் குறுக்குவாட்டில் வாள் பிடித்த நிலையில், இடது கையில் சிறிய குத்துவாளுடன் காட்சியளிக்கிறான். தலையின் வலதுபுறக் கொண்டை அலங்காரத்துடனும், காதுகளில் வட்டக் குழை, கழுத்தில் மூவட ஆபரணமும், கைகளில் தண்டை மற்றும் காப்பும் அணிந்துள்ளான். மூன்று மடிப்புகளுடன் கூடிய கச்சையை தன் இடுப்பில் கட்டியுள்ளான்.வீரனின் வலது புறத்தில் அவனுடைய மனைவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்பெண் தன் கணவன் இறந்தவுடன் அவளும் சதி மூலம் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அப்பெண் சதி முத்திரை காட்டும் வகையில், தன் இடது கையில் மலர் கொத்தும், வலது கையில் மதுக்குடுவையும் வைத்துள்ளாள்.

வரி வடிவமாக அமைந்த ஆடையும் அணிந்துள்ளார். இவருடைய ஆடை, அணிகலன்கள் எளிமையாக உள்ளது. வீரனின் வலது கால் அருகில் நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. நாய்க்கு பின்னால் வீரனின் மனைவியானவள், காலுக்கு கீழ அடையாளம் அறியமுடியாத ஏழு கல் அடுக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு சமய சின்னமாக கருத முடிகிறது. மேலும், இந்த சமயச் சின்னத்துடன் தொடர்புடைய வீரன் இதனை காவல் காத்தவனாக இருக்கக் கூடும். அதேபோல், நாய் அவனுக்குத் துணையாக காவல் காத்திருக்க கூடும் என்று அறிய முடிகிறது.

நடுகல்லின் வலது பக்கம் மேல்மூலையில் நான்கு தேவலோக பெண்கள் இறந்த வீரனையும், அவனது மனைவியையும் தேவலோகம் அழைத்துச் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. தேவலோகப் பெண்களின் நடுவில் உள்ள இருவர், அர்த்த பத்மாசன கோலத்தில் உள்ளனர். மற்ற இரு பெண்கள் ஆடல் கோலத்திலும், நான்கு பேரும் கைகோர்த்தவாறும் உள்ளனர். அப்பகுதி மக்கள், தங்களுக்கு தீராத தலைவலி ஏற்படும் போது, இந்த வீரனை வணங்கினால், தங்களுக்கு ஏற்பட்ட தலைவலி நீங்கும் என்ற ஐதீகம் பரவலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: