×

தொடர் விடுமுறை எதிரொலி கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி

சேந்தமங்கலம் : மழை பெய்யாததாலும், தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதாலும், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க, வனத்துறையினர் நேற்று காலை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பல மாதங்களாக வறண்டு கிடந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது.

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் இரவு தொடங்கி விடிய,விடிய மழை பெய்ததால், வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள கோவிலூர் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. இந்த தண்ணீர், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் செந்நிறத்தில் கொட்டுகிறது. மழை வெள்ளத்தில் கற்கள், செடி கொடிகள், மரங்கள் அடித்து வரப்பட்டு அருவியில் விழுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க, கடந்த புதன்கிழமை  இரவு முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதையடுத்து, அங்குள்ள அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் தடை காரணமாக மாசிலா அருவியிலும், நம் அருவியிலும் குளித்து சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், கொல்லிமலை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் ஆகாய கங்கை அருவியில் குளிக்க, வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கொல்லிமலையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்வது குறைந்துள்ளது. அருவியில் சரியான அளவு தண்ணீர் கொட்டுவதால், தடை விலக்கப்பட்டு மக்கள் குளிக்க அனுமதி வழங்கியுள்ளோம். தவிர, கோகுலாஷ்டமி மற்றும் வாரவிடுமுறை என தொடர் விடுமுறையில் வெளி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவது அதிகரித்துள்ளது. எனவே, அவர்கள் குளித்த மகிழும் வகையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : AgayaGangai Falls,Holidays ,Tourist
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...