டெல்லியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம்

புதுடெல்லி: காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  தற்போது காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளனர். காலம்காலமாக ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் காலகட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 70,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைகளை ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு குவித்திருந்தது. இதுமட்டும்மல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக, முன்னாள் முதலமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வேறு மாநில கட்சி தலைவர்களையோ, நிர்வாகிகளையோ அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மத்திய அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லியில் திமுக, காங்கிரஸ் உட்பட 14 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அந்த ஆர்ப்பாட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்  காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு அவர்களை விடுதலை செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த குழுவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, சீத்தாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, குபேந்திர ரெட்டி, ஆனந்த் சர்மா, சரத் யாதவ், மனோஜ் ஜா ஆகியோர் இடம்பெறுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து நேரடியாக காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல உள்ளனர். அங்கிருந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா, முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்ரீ நகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Gandhi, Delhi, Kashmir, Trip, Opposition Leaders
× RELATED இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய பாஜக...