×

மதுரை காமராஜர் பல்கலை., 69 பேராசியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு: விசாரணை நிறைவு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பனி நியமன முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நடத்தி வந்த விசாரணை முடிவடைந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி செல்லத்துரை துணைவேந்தராக பதவி வகித்தபோது 69 பேராசிரியர்களை பனி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து  ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தணிக்கையாளர் வீரபாண்டியன், வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராமசாமி ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் 69 பேராசிரியர்களின் கல்வித்தகுதி, பனி நியமன அறிவிப்புகள், அதற்கான விண்ணப்பங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பெற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் இறுதி கட்ட விசாரணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வழக்கில் அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் விசாரணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Madurai Kamaraj University, 69 professors, abuse, investigation completed
× RELATED அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்...