×

மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் ராமநதி அணை நிரம்பியது

கடையம் : கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் ராமநதி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாய பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடையம் அருகே  மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு உடைய  ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தெற்கு கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தபேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள  5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்தாண்டு கோடை வெயில் வாட்டி வதைத்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கியது. மே மாதம் அணை முற்றிலும் வறண்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 8ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மேற்குத்தொடர்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் வறண்டு கிடந்த ராமநதி அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. கடந்த ஜூலை 20ம் தேதி அணை நீர்மட்டம் 50 அடியானது. தொடர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பெய்த மழையால், நீர்மட்டம் உயர்ந்து கடந்த 10ம் தேதி 71 அடியை எட்டியது.


alignment=



இதனிடையே கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 83.5 அடியை தொட்டது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 30 கனஅடி நீரில் மதகு வழியாக விநாடிக்கு 10 கனஅடி தண்ணீரும், வடகால், தென்காலில் தலா 10 கனஅடி நீரும் வெளியயேற்றப்பட்டு வருகிறது. ராமநதி அணை நிரம்பியதையடுத்து பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


துணை ஆட்சியர் ஆய்வு

ராமநதி அணை நிரம்பிய தகவலறிந்த துணை ஆட்சியர் நடேசன், அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அம்பை தாசில்தார்  வெங்கடேஷ், ராமநதி அணை   உதவி  பொறியாளர் முருகேசன்,   அணை ஊழியர்   ஜோசப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மழை  மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு மாறுபடும். எனவே ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அடவிநயினார் அணையும் நிரம்புகிறது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை  மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இந்த மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.  தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 109.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.37 அடியாக உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58.50 அடியாக உள்ளது. விநாடிக்கு 287 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 124.75 அடியாக இருந்த நீர்மட்டம் 125 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் தற்போதைய நிலவரப்படி 90.73 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணை நிரம்ப 7 அடி மட்டுமே தண்ணீர் தேவை என்பதால் ஓரிரு நாட்களில் அடவிநயினார் அணை நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 22 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Tags : Kadaiyam, Heavy rains, Western Ghats,Ramanithi Dam
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...